தற்போதைய நிலைமையின் படி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது நாட்டுக்கும் தமிழர்களுக்கும் இனங்களிடையேயான நல்லிணக்கத்துக்கும் நல்லது என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நான் தொடர்ச்சியாக அந்த நிலைப்பாட்டில் உள்ளேன். இது எனது தனிப்பட்ட நிலைப்பாடு. கட்சி இதை இன்னும் ஏற்கவில்லை.
இவரை நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் இருந்தாலும் இவரை நீக்குவதற்காக நான் சதித் திட்டம் தீட்டி செயற்படவில்லை.
அவர் நாட்டுக்கு எதிராகவும் இன ஒற்றுமைக்கு எதிராகவும் செயற்படுகின்றார். அவரை நீக்க வேண்டும் என்பது காலத்தின் தேவையாகும். ஆனால், அது சதி அல்ல என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.