குறிப்பாக இது வரையிலும் இல்லாத வகையில் நல்லாட்சி அரசுக்கு அனைத்து பக்கங்களில் இருந்தும் பாரிய எதிர்ப்புகளும், மக்கள் மத்தியில் போராட்டங்களும் வெடித்துள்ளன.
வைத்திய சங்கம், பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்கள், வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டங்கள் என நாடு முழுவதும் பல்வேறு விதமான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.
ஒருவகையில் இந்தப்போராட்டங்கள் அனைத்தும் தமது கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என்ற பார்வைக் கோணத்தில் அமைந்தாலும் கூட.,
அனைத்துமே பிரதானமாக கூறும் விடயம் நல்லாட்சி அரசு முறைகேடாக நடந்து வருகின்றது. ஆட்சி சரியாக அமையவில்லை என்பது மட்டுமே.
அந்த வகையில் இவை ஆட்சிக்கு எதிராக தூண்டப்படும் போராட்டங்களா என்ற வகையிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
உதாரணமாக தற்போது பல்வேறு விதமான விமர்சனங்களை எழுப்பி வரும் மாலபே சைட்டம் தொடர்பிலான போராட்டங்கள்.
குறித்த தனியார் வைத்திய கல்லூரிக்கு அனுமதியானது ராஜபக்ச ஆட்சிக்காலத்திலேயே வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது. எனினும் தற்போது ஆட்சி மாற்றத்தின் பின்னர் பூதாகரமான பிரச்சினையாக அது மாறி விட்டதனை குறிப்பிடலாம்.
இவை ஒரு புறம் இருக்க பௌத்தம் அழிக்கப்படுகின்றது என்று ஆரம்பமான பிரச்சினை இடை நடுவில் இனவாதமாக மாறி கலவரங்களையும் ஏற்படுத்தும் ஆபத்தையும் உருவாக்கியது.
இந்த இனவாதங்களும் ஒரு வகையில் அடக்கப்பட்ட பின்னரும் தற்போது மீண்டும் புகை விட்டவாறே இருக்கின்றது என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.
இந்த நிலையில், தென்னிலங்கை தரப்பு தேரர்களும் ஆட்சிக்கு எதிராக கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக தேரர்களுக்கு இடையேயும் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்த வருடத்திற்குள் ஆட்சி கவிழ்க்கப்படும் என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச அதற்கான வேலைத்திட்டங்களில் தற்போது மீண்டும் இறங்கிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைக்காலமாக நாட்டில் இனவாதக்கருத்துகள் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது இதனால் ஆட்சிக் கவிழ்ப்பு கதைகள் வெளிவரவில்லை.
நாட்டில் பல்வேறு விதமான போராட்டங்கள் வெடித்துள்ள வேளையில் மக்கள் மத்தியில் மீண்டும் ஆதரவு திரட்டும் செயற்பாடுகளை மகிந்த முன்னெடுக்க ஆரம்பித்துள்ளார்.
அதற்கான ஆரம்ப கட்டமாக 3ஆம் திகதி திருகோணமலையில் மகிந்த ராஜபக்சவின் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது மகிந்தவின் ஆட்சிக் கவிழ்ப்புக்கான விளையாட்டின் ஆரம்பம் என்று கூறப்படுகின்றது.
“2015 ஜனவரி 8 ஆம் திகதி மாற்றத்தினை ஏற்படுத்திய கிழக்கு மாகாணத்திற்கு மகிந்த வருகை தரவுள்ளார். மகிந்தவை மீண்டும் அழைக்கின்றோம்” என்று கூறி கூட்டத்திற்கு ஆதரவு திரட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நாட்டில் ஒருபக்கம் இனவாத பிரச்சினை தொடர்ந்துள்ளதோடு மறு பக்கம் போராட்டங்களும் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
வடமாகாணத்திலும் கூட மாகாணசபையில் பிரச்சினைகள் உருவாகி உள்ள சமயத்தில் திருகோணமலைக்கு மகிந்த சென்று கூட்டத்தினை நடத்தவுள்ளார்.
இவரின் இந்த நடவடிக்கையானது மக்கள் மத்தியில் சரியான சந்தர்ப்பத்தில் ஆட்சி குறித்து விமர்சித்து, தன் பக்கம் ஆதரவு திரட்டும் ஒன்றாகவே அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், தற்போதைய ஆட்சியாளர்கள் இனவாதத்தினை பரப்புகின்றனர். அதனைத் தடுப்பதற்காகவும் இது குறித்து மக்களுக்கு தெளிவு படுத்துவதற்காகவும் திருகோணமலையில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மகிந்த அண்மையில் தெரிவித்திருந்தார்.
ஆட்சிக்கு எதிரானவர்கள் இனவாதத்தினை தற்போதைய அரசே பரப்பி வருகின்றது எனவும் கூறிவருகின்றனர். இதன் மூலம் மக்கள் மத்தியில் ஆட்சியின் மீதான நம்பிக்கைத் தன்மை குறைவடையத் தொடங்கும் என்று குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக தொடர்ந்தும் ஆட்சிக்கு பாரிய நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.