கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வை அடுத்து ஏராளமான சிறுவர்கள் பாடசாலைக்கல்வியை விட்டு இடைவிலகியும் ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்டும் காணப்படுகின்றனர்.
இந்த நிலையில் சிறுவர்களின் அபிவிருத்திகள் தொடர்பில் பல்வேறு தொண்டு நிறுவனங்களும் அரச நிறுவனங்களும் அதிகூடிய நிதிகளை ஒதுக்கி வருகின்ற போதும் அவை பாதிக்கப்பட்ட சிறுவர்களை சென்றடைவதாக இல்லை என பல்வேறு தரப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளன.
குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் அதிகளவான சிறுவர்கள், பாடசாலைகளுக்கு செல்லாத நிலையிலும் ஒழுங்கற்ற வரவுகளை கொண்டும் காணப்படுகின்றனர்.
குறிப்பாக வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான், கல்லாறு, பிரமந்தனாறு, ஊரியான், சிவபுரம், பூநகரி மற்றும் கோரக்கன்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவான சிறுவர்கள், பாடசாலைகளுக்குச் செல்லாத நிலை காணப்படுகின்றது.
இவ்வாறு கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 572 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாடசாலைக்கு செல்லாத நிலையிலும் ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்டு காணப்படுகின்ற போதும் 84 வரையான சிறுவர்களே மீளக்கற்றலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
ஏனைய சிறுவர்கள் பாடசாலை செல்லாத நிலையிலேயே காணப்படுகின்றனர். குடும்ப வறுமை குடும்பப் பிணக்குகள் காரணமாகவே அதிகளவான சிறுவர்கள் இவ்வாறு காணப்படுகின்றனர்.
இவ்வாறு காணப்படும் சிறுவர்கள் பலர் ஆபத்தான தொழில்களுக்கு பயன்படுத்தப்பட்டும் வருகின்றனர். இதனைவிட சட்டவிரோத மணல் அகழ்வுகள் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனைகள் என்பற்றுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
மாவட்டத்தின் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் கிராம அலுவலர் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் என மூன்றுக்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் கிராம மட்ட அமைப்புக்களும் உள்ளன.
இதனைவிட பிரதேச செயலகரீதியில் தனியான அலகுகளையும் மாவட்ட மட்டத்தில் தனியான பல பிரிவுகள் உள்ள நிலையிலும் சிறுவர் அபிவிருத்தி தொடர்பில் அதிகளவான நிதிகளை ஒதுக்கப்படுகின்ற போதும் சிறுவர்கள் விடயத்தில் போதிய கரிசனை காட்டப்படுவதில்லை என பல்வேறு தரப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளன.
இதேவேளை இளவயது திருமணங்களும் அதிகளவில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது