உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13ஆவது சர்வதேச மாநாட்டை யாழில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக மாநாட்டின் சிறப்பு தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று ஹட்டனில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்த அமைப்பானது 1974ஆம் ஆண்டு யாழில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தமிழ் பண்பாட்டு இயக்கமாகும். இந்த இயக்கத்தினுடைய கடந்த கால மாநாடுகள் அவுஸ்திரேலியா, லண்டன், தென்னாபிரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
கடைசியாக கடந்த வருடம் இந்தியாவின் புதுச்சேரியில் நடைபெற்றது. நானும் இந்த விழாவில் பங்குபற்றியிருந்தேன். அதன்போது இதன் ஏற்பாட்டாளர்கள் என்னிடம் அடுத்த வருடம் இந்த விழாவை நாம் இலங்கையில் நடத்தலாமா அதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமா? என என்னிடம் கேட்டிருந்தார்கள்.
அதற்கு அமைய நான் அவர்களிடம் இதனை இலங்கையில் நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தருகின்றேன் என கூறினேன்.
அதற்கு அமைவாகவே இந்த மாநாடு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம், 6ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் மிகவும் விமரிசையாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பலவேறு நாடுகளில் இருந்து பல முக்கியஸ்தர்கள் வருகை தரவுள்ளனர்.
இதன் மூலம் எமது நல்லாட்சியின் உண்மையான நிலைமைகளை நேரில் கண்டு தெரிந்து கொள்வதற்காக ஒரு சந்தர்ப்பம் அவர்களுக்கு இருக்கின்றது.
மேலும் வெளிநாடுகளில் இருந்து வருகின்றவர்கள் மூலமாக எமது கலை, கலாச்சார பண்பாடுகளை இன்னும் வளர்த்துக் கொள்ள முடியும் என நான் எதிர்பார்க்கின்றேன்.
இந்த அமைப்பானது இலங்கையிலேயே ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. அதனால் இங்கு நடத்துவது பொருத்தமாக இருக்கும் எனவும் நான் எதிர்பார்க்கின்றேன்.
இதில் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் இருந்து கலை, கலாச்சார குழுக்கள் தங்களுடைய திறமைகளை வெளிக்காட்ட இருக்கின்றார்கள்.
எமது மலையகத்தில் இருந்தும் ஒரு பேச்சாளர் அதாவது மலையக கலை, கலாச்சாரம் தொடர்பாகவும் ஒரு சில மலையக கலைகளும் அங்கு மேடையேற்ற இருக்கின்றோம்.
எனவே அனைவரும் இந்த மாநாட்டில் பங்குபற்ற வேண்டும் என நான் அழைக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சருடன் ஜெர்மன் நாட்டின் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் ராஜசூரியர், இந்த மாநாட்டின் ஊடக ஒருங்கிணைப்பாளர் செந்தில்வேலவர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.