ஒட்டு மொத்த அதிகாரப் பகிர்வை பெற்றுக் கொள்ள வேண்டிய தற்போதைய தருணத்திலே மக்களும் தமது ஒற்றுமையை வெளிக்காட்டி அதிகூடிய அதிகாரப் பகிர்வை பெறவேண்டுமென தெரிவித்துள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், சிறுபான்மை சமூகங்களை சீண்டிப் பார்க்காது அவர்களின் அரசியல் உரிமைகளைப் பகிர்ந்து கொடுப்பதே நீடித்த சமாதானத்திற்கு வழிவகுக்குமென சுட்டிக்காட்டியுள்ளார்.
சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் ஏறாவூர் நகர் மற்றும் ஏறாவூர்ப் பற்று ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட சுமார் 100 தமிழ் முஸ்லிம் குடும்பங்களுக்கான இலவச குடிநீர் இணைப்புக்கான கடிதங்கள் வழங்கும் வைபவம், ஏறாவூர் கலைமகள் வித்தியாலயத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இனப்பிரச்சினைக்கான தீர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த தருணத்தில், இரு சிறுபான்மை இனங்களின் இணைவு என்பது இன்றிமையாத ஒன்றெனவும் கிழக்கு முதல்வர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, சிறுபான்மை இனங்களுக்கு அரசியல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, கடந்த காலத்திலே பல்வேறு உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் தமது பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு சிறுபான்மை அரசியல் தலைமைகளையும் அடிமட்ட மக்களையும் பல்வேறு வழிகளில் பிரித்து வைத்தார்கள் எனக் குறிப்பிட்ட கிழக்கு முதல்வர், கடந்த கால தவறுகள் மீண்டும் இடம்பெற அனுமதிக்கக் கூடாதென வலியுறுத்தியுள்ளார்.