கிழக்கு மாகாணத்தில் ஆளுநர் பதவி வெற்றிடமாகியுள்ள நிலையில், அந்த பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த ஒஸ்ரின் பெர்னான்டோ ஜனாதிபதியின் செயலாளராக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், அவர் நாளைய தினம் ஆளுநர் பதவியிலிருந்து விலகவுள்ளார்.
எனவே, கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இந்த பதவி நியமனம் உறுதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பசீர் சேகு தாவூத்தை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஜனாதிபதியில் கோரிக்கையை பசீர் சேகு தாவூத் நிராகரித்துள்ள நிலையிலேயே, புதிய ஆளுநராக ஏ.எல்.எம். அதாவுல்லா நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கிழக்கு மாகாண சபையின் ஆயுட் காலம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 25ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.