பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் அனைவருக்கும் மாநில சுகாதாரத்துறை மூலம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
சிறையில் உள்ள 4400 கைதிகளுக்கு நடத்தப்பட்ட இந்த பரிசோதனையின் முடிவில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
36 பேருக்கு எய்ட்ஸ்
சிறையில் உள்ள 36 கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. 12 கைதிகளுக்கு காசநோய் இருப்பதும், 60 கைதிகளுக்கு வலிப்பு நோய் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதய நோய் பாதிப்பு
மேலும், 142 கைதிகள் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. ஏராளமான கைதிகள் இதயம் தொடர்பான நோய்களும் ஏற்பட்டுள்ளன.
தனி சிறை
காசநோய் பிற கைதிகளுக்கு தொற்றாமல் தடுக்க காசநோய் பாதித்த 12 பேரும் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புள்ள கைதிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கான மருத்துவ சிகிச்சை குறித்து பதிவேடுகளில் பதியப்பட்டு வருகிறது.
டாக்டர்கள் பற்றாக்குறை
இந்த சிறையில் 4400 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இது மிக அதிக அளவாகும். இவ்வளவு பேருக்கு மூன்றே மூன்று மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர்.
விரைவில் மேம்படுத்த நடவடிக்கை
மூன்று டாக்டர்களால் இவ்வளவு கைதிகளுக்கு மருத்துவம் பார்க்க முடியாத சூழல் பரப்பன அக்ரஹார சிறையில் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிறைத்துறை டிஐஜி ரூபா, பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள மருத்துவமனை விரைவில் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.