மட்டக்களப்பு, வாகரை மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள வளாகத்தில் இன்று பிரதேச மக்களால் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
கண்டலடி, புளியங்கண்டலடி, வாகரை, பால்சேனை, கதிரவெளி போன்ற கிராம அபிவிருத்திச் சங்கங்கள் இணைந்து குறித்த சிரமதானப் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
யுத்தத்தின்போது மரணித்த விடுதலைப் புலிகளின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டு, புலிகளினால் மாவீரர் துயிலும் இல்லம் புனித பூமியாக பராமரிக்கப்பட்டது.
யுத்தம் முடிவடைந்த பின்னர் குறித்த கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்ட கல்லறைகள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டிருந்தது.
அதன் பின்னர் குறித்த பகுதியில் இராணுவத்தினரால் தென்னங்கன்றுகள் நடப்பட்டிருந்தது, தொடர்ந்து பராமரிப்பு இல்லாத காரணத்தினால் தென்னங்கன்றுகள் அழிவடைந்து செல்ல அப்பகுதி அடர்ந்த காடுகளாக மாற்றமடைந்தது.
சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட இடங்களில் 30ற்கு அதிகமான மாவீரர் துயிலும் இல்ல நடுகற்கள் புதைகுழிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டன.
மேலும் குறித்த சிரமதானப் பணிகளின் போது நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன், கிழக்கு மாகாண உதவி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, எஸ்.நடராஜா, ஞா.கிருஸ்ணபிள்ளை மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.