வல்லிபுரம் வசந்தன் என அழைக்கப்படும் கரும்புலி கப்டன் மில்லர் யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த இலங்கைப் படைத்தளம் மீதான தாக்குதலில் 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் திகதி வீர மரணமடைந்தார்.
இலங்கை இராணுவத்தினரின் ஒப்ரேசன், லிபிரேசன் என்னும் இராணுவ நடவடிக்கையின் மூலம் யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் பாரிய இராணுவ முகாம் ஒன்றை அமைத்திருந்தனர்.
இந்நிலையில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட சுமையுந்து(பார ஊர்தி) ஒன்றை நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நோக்கி நகர்த்திய கரும்புலி கப்டன் மில்லர் அதனை வெடிக்க வைத்து உயிரிழந்துள்ளார். இதன் போது 40 இராணுவ வீரர்கள் அவ்விடத்தில் மரணமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் நிலைக்கொண்டிருந்த இலங்கை முப்படைத் தளங்கள் மீது விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினர் பல்வேறு தாக்குதல்களை தொடுத்ததில் 300 இற்கு மேற்பட்ட கரும்புலி மாவீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் முதற் கரும்புலி கப்டன் மில்லர் வீர மரணமடைந்த ஜூலை 5 ஆம் திகதி கரும்புலிகள் நாள் என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டு வந்தது.
மேலும் கடந்த வருடம் நவம்பர் 27 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் வழமைபோல் நாளை 5 ஆம் திகதி கரும்புலிகள் நாள் அனுஷ்டிக்கப்படுமா என இலங்கைப் புலனாய்வுப்பிரிவு உறுப்பினர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் எழுப்பப்பட்ட கேள்வி, 2017 ஆம் ஆண்டு கரும்புலிகள் நாள் நினைவு தினம் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் அறிந்திராத நிலையில் அது குறித்து நட்புரீதியாக கேட்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.