படுகொலை சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் ஊர்காவற்றுறை பொறுப்பதிகாரியாக இருந்த உப பொலிஸ் பரிசோதகர் குயின்ரஸ் ரோனால் பெரேராவிற்கு தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய “ட்ரயல் அட்பார்” தீர்ப்பாயம் முன்னிலையில் தொடர் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், இன்றைய தினம் இடம்பெற்ற விசாரணைகளின் போது சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியில் ஊர்காவற்றுறை பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றியவர் தீர்ப்பாயத்தின் முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார்.
இதன் போது, முதல் எட்டு சந்தேகநபர்கள் குறித்தும் திருப்திகரமான சாட்சியங்கள் வழங்கிய அவர், 9வது சந்தேகநபரான சுவிஸ் குமார் தொடர்பில் மழுப்பலான முறையில் சாட்சியம் வழங்கியிருந்தார்.
“9வது சந்தேகநபரைத் தான் கைது செய்யவில்லை எனவும், அவர் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனவும், அவரை மன்றில் முன்னிலைப்படுத்தவில்லை” எனவும் அவர் தீர்ப்பாயம் முன்னிலையில் சாட்சியம் வழங்கியிருந்தார்.
எனினும், இதனை அவதானித்த தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் கடும் தொனியில் அவரை எச்சரித்தனர்.
“உமது பகுதியில் நடைபெற்ற இந்தப் பாரதூரமான சம்பவம் நடைபெற்றபோது நீரே பொறுப்பதிகாரி. 9 ஆவது சந்தேகநபரைக் கைது செய்யுமாறு கோரப்பட்டபோது நீர் கைது செய்யவில்லை.
வெள்ளவத்தைப் பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டபோது குற்றச் செயல் தொடர்பான பொலிஸ் அறிக்கை அவர்களால் கோரப்பட்டது. நீர் அது தொடர்பான விவரங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளீர்.
ஊர்காவற்றுறை நீதிமன்றில் சந்தேகநபரை முற்படுத்த தவறியதாலேயே மக்கள் கொதிப்படைந்து யாழ்ப்பாண நீதிமன்றைத் தாக்கினர். நீதிமன்றைத் தாக்கியமைக்கும் உமது செயற்பாடே காரணம்.
9வது சந்தேகநபர் தொடர்பான விவரங்களை நீர் நீதிமன்ற விசாரணைகளில் மறைத்துள்ளீர். 8 சந்தேக நபர்களைக் கைது செய்த நீர் மிகப் பாரதூரமான ஒரு கொலைக்குற்றம் நடந்த வேளையில் 5.19.2015 அன்று பொலிஸ் நிலையத்தில் இருந்து விடுமுறை பெற்று மகரகம நீதிமன்றத்துக்கு சென்றது பாரதூரமான பொறுப்பற்ற செயல்.
மகரகம நீதிமன்றத்துக்கு சென்ற வழக்கு இலக்கத்தை ஒப்படைக்க வேண்டும் என கடும் தொனியில் நீதிபதிகள் எச்சரித்தனர்.