நாடளாவிய ரீதியில் நாளைய தினம் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்த அரச வைத்திய அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பு போராட்டம், ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) இத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
சைட்டம் நிறுவனத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு அரசாங்கம் மற்றும் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்த நிலையில், இப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தீவிரமாக பரவிவரும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் வருடத்தின் முதல் 6 மாதங்களில் 70,000இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 200 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அரச மருத்துவ அதிகாரிகளின் போராட்டம் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதேவேளை, மக்களின் நிலையை கருத்திற்கொண்டு இப் போராட்டத்தை கைவிடுமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்த சில மணித்தியாலங்களில் குறித்த போராட்டத்தை ஒத்திவைக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.