பசுமையான மற்றும் தூய்மையான சுற்றுச் சூழலைக் கொண்ட பாடசாலையாக கடந்த 2015, 2016 ஆண்டுகளில் ஜனாதிபதி தேசிய விருதான சுக சர தக்சலாவ விருதினை இரண்டு தடவை கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயம் பெற்றுக்கொண்டது.
இரண்டு தடவைகள் இவ்விருதினை பெற்றுக்கொண்ட அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயம் 2017ம் ஆண்டுக்கான சுற்றாடல் தகவல் நிலையம் ஆரம்பிப்பதற்கான தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு தமிழ் பாடசாலையாகவும் காணப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தேசிய ரீதியில் ஐந்து பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக சுற்றாடல் தகவல் நிலையம் ஆரம்பிப்பது வழக்கமாகும்.
அந்த வகையில் 2017ம் ஆண்டுக்கான சுற்றாடல் தகவல் நிலையம் அமைப்பதற்கான தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஐந்து பாடசாலைகளில் ஒரேயொரு தமிழ் பாடசாலையாக கிளிநொச்சி விவேகானந்த வித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ஏனைய நான்கு பாடசாலைகளும் சிங்கள மொழி பாடசாலைகளாகும். இதற்கான நிகழ்வு கடந்த முப்பதாம் திகதி பாடசாலையில் இடம்பெற்றது.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளா் நாயகம் கலந்து கொண்டு சுற்றாடல் தகவல் நிலையத்தை ஆரம்பித்து வைத்ததோடு, மூன்று லட்சம் ரூபா பெறுமதியான நூல்களும் நூலக உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.