கண்ணுக்குள் நூறு நிலவா அத்தியாயம் 2 – காவியா
வேகமாக வந்த காரை துரித கெதியில் அவதானித்த சரவணன் லாவகமாக துவிச்சக்கர வண்டியை ஒடுக்கினான். ஒடுக்கிய வேகத்தில் நிலை தடுமாறிய தீபனா சையிக்கிளில் இருந்து நிலத்தில் சரிந்தாள்.நிலத்தில் விழுந்த தீபனாவின் தலை அருகில் இருந்த கல்லொன்றில் மோதிக்கொண்டது.
நேரம் போவது தெரியாமல் இளையராஜாவின் இசையை கண்களை மூடி ரசித்தபடி அமர்ந்திருந்தான் கார்த்திக். இளையராஜாவின் மெல்லிசை பாடல்கள் என்றால் என்றுமே அலாதி பிரியம் அவனுக்கு.இசையின் ரசிப்பில் அவனது மனம் சிக்கியிருந்தாலும் இடையிடையே ஏதோ ஒரு எண்ணம் மனதின் மூலையின் துளிர்விடுவது போலவே உணர்ந்தான் கார்த்திக்.
கார்த்திக் அவனது வீட்டின் செல்லபையன். தமிழீழ தேசத்தில் பல அடுக்குமாடி கடைகளுக்கு சொந்தக்காரன். அவனது வாழ்க்கையில் சோகம் என்றால் என்னவென்றே அறியாத அளவிற்கு அவனை அவனது பெற்றோர்கள் கவனித்து வந்தாலும் இன்று ஏனோ அவனது மனம் ஏதோ ஒரு சிந்தனைக்கு அடிபணிந்து இருந்தது போலவே தோன்றியது.
”கார்த்தி என்னப்பா, முகம் எல்லாம் ஒரு மாதிரி கவலையாக இருக்கின்றதே”
என்ன விடயம் ?என்று கேட்டபடி அவனது தாய் லக்சுமி அருகில் வந்தமர்ந்தாள். ”ஒன்றும் இல்ல அம்மா, கொஞ்சம் என்னை தனியா இருக்க விடுங்களேன்” என்று சினந்தபடி சட்டென்று எழுந்து விலகிப் போனான் கார்த்திக்.
என் பிள்ளைக்கு என்ன ஆச்சு? ”எதற்காக இப்படி எரிஞ்சு விழணும்” என்று முனகியபடி அருகில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து கொண்டாள் லக்சுமி.
தனது அறைக்குள் வந்த கார்த்திக்கும் எதனால் தனக்கு மனசு பாரமாக இருக்கின்றது என்று அறியமுடியாமல் இருந்தது. ”கடவுளே ஏன் இப்படி என் மனம் பாரமாக இருக்கின்றது” என்று கண்ணை மூடி யோசனையில் அமர்ந்திருந்தான் கார்த்திக்.
”கார்த்திக் சார், கார்த்திக் சார்” என்று வேலைக்கார அண்ணா அழைக்கும் அழைப்பை கேட்டு வெளியில் வந்தான் கார்த்திக். ”என்ன சங்கரன் அண்ணா கூப்பிட்டீங்க? என்று கேட்டபடி அவரை நோக்கி நடந்தான் கார்த்திக்.
”தம்பி நீங்க நேற்று காரால் மோதிய அந்த பொண்ணு எங்க வீட்டுக்கு அருகில் இருக்கும் பொண்ணு தான் தம்பி. நான்கு அண்ணன்களுக்கு பின்னால் வந்த செல்ல பொண்ணு அவள். எப்போதும் கேலியும் கிண்டலுமாக இருப்பாள். அவள் இருக்கும் இடமே சிரிப்பால் நிரம்பியிருக்கும் என்று கூடியபடி கார்த்திக்கை நோக்கினார் சங்கரன்.
அவனது முகத்தில் தெரிந்த சந்தோச எல்லைகளை கண்ட சங்கரனுக்கு கோபம் கோபமாக வந்தது. எல்லாம் பணக்கார திமிர். பாவம் சின்ன பொண்ணை காரால் முட்டிவிட்டு அந்த இடத்தில் நிற்கவே விடாமல் கிளம்ப சொன்ன கார்த்திக்கின் தந்தை பரமசிவத்தின் மீது இருந்த கோபம் இப்போது கார்த்தியின் மீது பாய்ந்தது சங்கரனுக்கு .
தம்பி உங்களை மனசாட்சி உள்ள பையன் என்று நினைத்து தான் எங்க தீபனா குட்டிக்கு நடந்த விடயத்தை உங்களிடம் சொல்ல வந்தால் நீங்க சிரிக்கின்றீர்களா? எல்லாம் உங்கள் பணக்கொழுப்பு என்று முணுமுணுத்தபடி நகர்ந்தார் சங்கரன்.
சங்கரன் முனகிய எதனையும் காதில் வாங்கும் நிலையில் கார்த்திக் இருக்கவில்லை.அவனுக்கு தனது மனது எதனால் கவலைபட்டுக் கொண்டு இருந்தது என்றதற்கான காரணம் விளங்கியது போலவே இருந்தது. தீபனா எப்படி இருப்பாள்? தூரத்தில் இருந்து பார்த்த போதே அவளது விழிகள் அவனை சல்லடை போட்டு தாக்கியது போலவே உணர்ந்தான் கார்த்திக். ஆம் அவனது பாடசாலை முடிவு நாள் அன்று. வழமை போல நண்பர்களுடன் அரட்டை அடித்தபடி கல்லூரி சுவருக்கு முண்டு கொடுத்தபடி பேசிக்கொண்டு இருந்தான் கார்த்திக். சட்டென்று புடைசூழ நின்ற நண்பர்களின் சத்தம் இல்லாது போகவும் அவர்களின் பார்வையை தொடர்ந்து தனது பார்வையை செலுத்தினான் சரவணன்.
அன்று மலர்ந்த ரோஜாப்பூவுக்குள் மெல்லிய பனித்துளி பட்டு தெறிப்பது போன்ற பற்கள் மின்ன ஒரு தேவலோக தேவதை அருகில் இருந்த குழந்தைகளை பார்த்து சிரித்தபடி இருந்தாள். அவளது அழகிய சிரிப்பை ரசித்தபடி இருக்கும் போதே இவர்களை கடந்து சென்ற அவள் சட்டென்ற ஒரு பார்வையை இவனை நோக்கி வீசினாள். அந்த பெண்ணின் கண்களுக்குள் காந்த சக்தி இருந்திருக்க வேண்டும்.அவள் வீசிய பார்வை வீச்சை தாங்க முடியாத இவன் யாருடா இவள்? என்று அவனது நண்பர்களை பார்த்துக் கேட்டான்.
”யாரென்று தெரியலைடா” இங்கே எங்கோ தான் இருக்கின்றாள். கடந்த இரண்டு நாட்களாக எமது கல்லூரி பக்கமாக காண்கின்றோம் என்று கூறிய நண்பர்களின் மூச்சில் அனல் அடிப்பதை அவனால் உணரக்கூடியதாக இருந்தது.
அப்போது எங்கிருந்தோ வந்த காற்றில் ”தேவதை போலொரு பெண்ணிங்கு வந்தது தம்பி உன்னை நம்பி” என்ற பாடல் மிதந்து வந்தது. அந்த பாடலை கேட்டபோது அவனது மனமும் மெதுவாக சிலிர்த்துக் கொண்டது. அவள் யார்? எவ்வாறு அவளை பற்றி அறிய முடியும்? என்று அவனது மனம் அலைபாய தொடங்கியது.
ஒரு பெண்ணை பற்றி சும்மா விசாரித்தால் என்ன நடக்கும் என்று அறியாதவன் அல்ல கார்த்திக். ஆனாலும் அவளை பார்க்கவேண்டும் என்றும் பேசவேண்டும் என்றும் அவனது மனதில் ஆசை துளிர்விடுவதை தடுக்க முடியாமல் இருந்தான் கார்த்திக்.
நேற்று அவன் தனது வகுப்பை முடித்துவிட்டு வரும்போது தனது காரில் மோதி விழுந்த அந்த அழகியின் முகமும் ஏனோ அவனது மனக்கண்ணில் ஊசலாடியபடி இருந்தது.ஐயோ அவளா ? அவளா என் கனவு தேவதையா? நான் காரால் மோதிய பெண் என்று மனம் பதற பித்து பிடித்தவன் ஓடினான் கார்த்திக். தெருவோரத்தில் கார் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதை மறந்த அவன் எந்தவிதமான சிந்தனையும் அற்றவனாக வீதியை கடக்க முற்பட்டான் அவன்.
கார்த்திக் வீதியை நோக்கி ஓடியதை கண்ட அவனது தாயார் லக்சுமி ”கார்த்தி தம்பி, கார்த்தி” என்னடா ஆச்சு உனக்கு என்று கூப்பிட்டபடி படி மாடிப்படியில் இருந்து வேகமாக இறங்கி வந்துகொண்டு இருந்தாள். மகனுக்கு என்ன ஆச்சோ என்று பதறிய அவளுக்கு வேறு எந்த விதமான எண்ணமும் ஓடவில்லை. மாடிக் கைப்பிடியை கூட பிடித்து நடக்க மறந்தவளாக மாடிப்படியில் இறங்கிய லக்சுமியின் கால்கள் ஒன்றுடன் ஒன்று பிணைய நிதானம் தவறிய அவள் மாடிப்படியில் இருந்து வேகமாக உருண்டு தரையை நோக்கி வந்துகொண்டு இருந்தாள்.
தொடரும்
காவியா