தமிழீழ விடுதலைப் புலிகளின் தயவாலேயே இரா.சம்பந்தன் தேர்தலில் வெற்றி பெற்றார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ். கந்தர்மடத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தேர்தலில் தோற்றுப்போன தரப்பினர் என கூறி வருவது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,
1977ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு பின்னர் சம்பந்தன் ஒரு தேர்தலிலும் வெற்றியடையவில்லை. 2000ம் ஆண்டு தேர்தலில் பயத்தினால் போட்டியிடவில்லை. அவ்வாறான சம்பந்தன் லண்டனுக்கு சென்று தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தின் காலில் விழுந்தார்.
லண்டன் நாடாளுமன்ற கட்டிடத்தின் ஒரு தொகுதியில் அன்டன் பாலசிங்கத்தின் காலில் விழுந்த சம்பந்தன் “நான் இனி துரோகம் செய்ய மாட்டேன், சாகும்போது துரோகியாக சாக விரும்பவில்லை” என கெஞ்சினார்.
ஆனால் தான் தனியே தீர்மானிக்க இயலாது என அன்டன் பாலசிங்கம் கூறிய பிறகு, மீண்டும் திருகோணமலைக்கு வந்து புலிகளின் போராளி ஒருவரை பிடித்து அவருடைய மோட்டார் சைக்கிளில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்று தளபதி சொர்ணத்தின் காலில் விழுந்தும் கெஞ்சினார்.
அதன் பின்னர் இரா.சம்பந்தனுக்கு புலிகள் புனர்வாழ்வு கொடுத்து தேர்தலில் போட்டியிட செய்தனர். புலிகளின் தயவால் தேர்தலில் வெற்றியடைந்தார்.
இலங்கையின் புதிய அரசியலமைப்பில் ஆட்சி முறைமை சம்பந்தமாகச் சொற்பதங்கள் அல்லது கோஷங்கள் தேவையில்லை. உள்ளடக்கங்கள் தான் முக்கியம்.
ஒற்றையாட்சி, சமஸ்டி போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என்ற ஒருகருத்து இன்றைய அரசியலரங்கில் முன்வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் இவ்வாறான கருத்துக்களை விதைப்பதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இலங்கையிலிருந்து பிரித்தானியர் வெளியேறிய கடந்த 1948ம் ஆண்டுமுதல் இலங்கையில் நிறைவேற்றப்பட்டு இருக்கின்ற மூன்று அரசியலமைப்புக்களும் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்களாகத் தான் அமைந்துள்ளன.
முதலாவது சோல்பரியாப்பில் சிங்களத்திலோ, தமிழிலோ, ஆங்கிலத்திலோ ஒற்றையாட்சி என்ற வார்த்தைப் பிரயோகம் காணப்படவில்லை.
அந்தவகையில், இலங்கையின் நீதித்துறையைப் பொறுத்தவரை ஒரு அரசு என்றால் அது ஒற்றையாட்சியாக இருக்கலாம் எனும் அடிப்படையில் தான் அனைத்துத் தீர்ப்புக்களும்இதுவரை வழங்கப்பட்டு வருகிறது.
65 வருடங்களுக்கும் மேலாகச் செயற்பட்டு வரும் இலங்கையினுடைய சிங்கள பெளத்தத் தேசிய வாதத்தினுள் ஊறியிருக்கும் நீதித்துறை ஒற்றையாட்சி என்ற சொல் தவிர்க்கப்பட்டிருப்பதால் ஒற்றையாட்சி அல்ல என்ற முடிவுக்கு வரும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது.
பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த 60 வருட காலமாக சமஸ்டி தீர்வு கேட்டுப் போராடி வரும் நிலையில் அந்த மக்களுக்குச் செய்கின்ற படுமோசமான ஏமாற்றமாக இத்தகைய செயற்பாடு அமைந்துள்ளது.
புதிய அரசியலமைப்பு சமஸ்டி என்ற வார்த்தையைப் பயன்படுத்தாவிடினும் சமஸ்டியின்உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கும் எனக் கூறுவதும் எங்களைப் பொறுத்தவரை அப்பட்டமான பொய்யாகவே பார்க்கப்படுகின்றது.
இலங்கையில் ஒரு அரசு ஒற்றையாட்சிக்குட்பட்டு மாத்திரம் தான் இருக்கலாம் என நீதித்துறை கூறியுள்ள நிலையில் இதுவரை காலமும் இருந்தது போன்று ஒற்றையாட்சிக்குட்பட்டு இந்த அரசு இயங்கப் போவதில்லை.
அந்தத் தன்மை முற்று முழுதாக மாற்றமடையப் போகிறது என்ற வகையில் தெளிவான மாற்றத்தை ஏற்படுத்துவதானால் அதற்குரிய சரியான சொற்பதத்தைப் பயன்படுத்தாமல் அந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பது தான் எங்களுடைய வாதம்.
இலங்கை அரசு ஒரு சமஸ்டி ஆட்சி முறை என்ற சொற்பதம் பதிவு செய்யப்பட்டால் மாத்திரம் தான் சிங்கள பெளத்த தேசியவாதத்தினுள் ஊறியிருக்கும் இலங்கையின் நீதித்துறை மீண்டும் எங்களுடைய அபிலாசைகளை ஒற்றையாட்சி முறைமைக்குள் முடக்குவதனை நாங்கள் தடுக்க முடியும் என்றார்.