கந்தக பூக்களுக்கு…
“நெல்லியடி”
வானம் இருண்டு போய் கிடந்தது
கண்ணீர் விழியின் ஓரமெங்கும்
சிதறிக் கொண்டு இருந்தது
ஈழத்தின் சாவு
வாசல் வரை வந்து
துடித்து கொண்டிருந்தது
அங்கே விடி வெள்ளி ஒன்றின்
ஒளி ஒரு புள்ளி கோடிடப்படுவதை
யாருமே அறியவில்லை
வரலாற்று புத்தகம் அன்று
வீர வார்த்தைகளை
எழுச்சியாக தன் மீது பதிந்து கொண்டது
சிங்களத்தின் கொட்டமடக்க
கருவி சுமந்தவர் நினைவில்
அன்று சிங்களத்தின்
பிடரியில் ஏறி
அவர்களுக்கு மரணத்தை
பரிசாக்க கந்தக குழந்தை
ஒருவன் வண்டி ஏறி வந்தான்
அப்போது தான் எங்கள்
மண் கொஞ்சம்
சுவாசித்து கொண்டது
அவன் கருவில் இருந்த போதே
கந்தகத்தை தின்றவன்
அதனால் தானோ அவனின்
முடிவுரையில் ஓர் பெரும்
முகவுரை எழுதப்பட்டது
கரிய உடை உடுத்து
வலிய பகை முடிக்க
ஓவியங்களாக தம்மை
தங்கள் தூரிகைகளால்
கிறுக்க தொடங்கினர்
புலி மறவர்கள்.
அவர்கள் தம் உடலின்
சிதறல்களை நிழலாய்
கண் முன்னே கண்டவர்கள்
அதன் முடிவுக்குள்
எங்கள் விடியல் ஒளியை
நினைவாய் கொண்டவர்கள்.
தரை, கடல், வானம்
என நிலவிய தடை
உடைக்க விலையிட
முடியா உயிரை காற்றோடு
கலந்து வெடியாய் போன
கந்தக வீரர்கள்
முகமறியா, முகவரி தெரியா
மரணத்தை நஞ்சு வில்லைக்குள்
கொண்டு நகர்ந்த கரிய வீரர்கள்
இலக்குக்காக இலக்கோடு இலக்காக
பயணித்த இரும்பு மனிதர்கள்
இலக்கழித்து உயிரை இரத்த
சிதரல்களுக்குள் கந்தகமாக்கிய
மான மாவீரர்கள்
எங்கள் உடல் சிதறல்களை
மாலை ஆக்கி
சிதறி போன உதிரத்தை
எண்ணையாக்கி
நினைவுகளில் வணங்குகிறோம்
கந்தக பூக்களே…
– இ.கவிமகன்