மகாநாயக்க தேரர்களின் அனுமதியின்றி புதிய அரசியலமைப்பு வெளியிடப்படமாட்டாது என சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன நேற்று மகாநாயக்க தேரர்களுக்கு உறுதியளித்துள்ளார்.
அத்துடன் ஒற்றையாட்சிக்கோ, பௌத்தமதத்திற்கான முன்னுரிமைக்கோ பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு அரசியலமைப்பு மறுசீரமைப்பும் மேற்கொள்ளப்படாது எனவும் உறுதியளித்துள்ளார்.
நேற்று கண்டியிலுள்ள மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தபோதே இவ்வுறுதிமொழியை வழங்கியுள்ளார்.
இன்னமும் புதிய அரசியலமைப்பு வரைவு இடம்பெறவில்லை. புதிய அரசியலமைப்பு வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், மகாநாயக்க தேரர்களிடமும், ஏனைய மதத் தலைவர்களிடமும் கையளிக்கப்படும்.
புதிய அரசியலமைப்பு ஒன்று வரையப்படும் போது, மகாசங்கம் மற்றும் ஏனைய பங்காளர்களுடன் கலந்துரையாடப்பட்டே அது மேற்கொள்ளப்படும் என்றும் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருப்பதாக, வண. ஓமல்பே நாயக்க தேரர் தெரிவித்தார்.
நான்கு மணித்தியாலங்களாக நடைபெற்ற இச்சந்திப்பில், வடக்குக் கிழக்கில் புனித இடங்கள் அழிக்கப்படுதல், பாதுகாக்கப்பட்ட காடுகள்அழிக்கப்படுதல், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் முரண்பட்ட கருத்துக்களை வெளியிடுதல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.