எழுக!! மெகஸ்தனிஸ்!
இப்போதெல்லாம்
உரையாடல்களின்
முதற்பாகத்திலேயே தூங்கிவிடுகிறாள் அனா
மலைகளையும்,
காடுகளையும்,
கண்டங்களையும் கடந்து
பிரகாசமான ஒரு சொல்லை
எடுத்துவந்து அதில் காதலை
பீச்சியடித்து அவளிடம் கொடுப்பேன்
பனம்பழத்தில் சிக்கிய பல்லுப்போல்
அந்தரித்த முத்தமொன்றை
எங்கோவொரு
தனிமையின் செரிமாணத்திலிருந்து
எடுத்தெனக்கு ஊட்டுவாள்
நாட்களின் தீவிர பாச்சலில்
செயலற்றுப்போகும்
காதலின் பிரடியில்
பலத்த தாக்குதல்களை நிகழ்த்திவிடுகிற
வார்த்தைகளை
பசுமையான முயல்களின்
விதைகளிலிருந்து
பறித்தெடுத்துவருகிறாள்
முயல்களுக்கு பயிற்றம்
விதைகளை தயார் செய்யும்
நாட்களில்
காதலுக்கான ஒற்றை விதையை
பழுதடைந்த தரையில் நட்டுவிட்டு
நழுவி வீழ்ந்த ஒற்றை
முடியால் கட்டிவைக்கிறாள் அனா
பேசிக்கொண்டிருக்கும்
போதே குறட்டைவிட்டுத்தூங்கிவிடும்
குட்டிப்பூனையின் முடியொன்று
சிறுவயதில் தன் மூக்கினுள்
போய்விட்டதாக பிதற்றிக்கொள்ளும்
அனா
பிரம்மாண்டக் கனவொன்றின் பிரளயத்தில் திடுக்கிட்டெழுகிறாள்
சூறாவளியாய் சுழல்கிறது அவள் மூச்சு
பேசுவதில் பிடிப்பற்றுப்போகிற அவளுக்கு
எந்த தேசத்தின்
காதல்வார்த்தையை பரிசளிக்க
பொறுமையற்று தனியே எத்தனை
நாள்தான் பிதற்றுவது
நான் அவசரமாய்
மெகஸ்தனிஸை கல்லறையிலிருந்து
எழுப்பியாகவேண்டும்
– அனாதியன்