சிறிலங்காவின் முன்னணி பௌத்த மதபீடங்களின் மகாநாயக்க தேரர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழு சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது. கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு சந்திக்கவுள்ளது.
புதிய அரசியலமைப்பு அல்லது அரசியலமைப்புத் திருத்தம் தற்போது நாட்டுக்குத் தேவையில்லை என்று பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்களின் கூட்டுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. சிறிலங்கா அதிபரிடம் இந்த முடிவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பௌத்த பீடங்களின் அனுமதியின்றி அரசியலமைப்பு சீரமைப்பு இடம்பெறாது என்று சிறிலங்கா அதிபர் வாக்குறுதி அளித்துள்ளார்.
இந்தப் பின்னணியிலேயே, பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திக்கவுள்ளது.
மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து, அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாகவும், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்தும் அவர்களுக்கு விளங்கப்படுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் தாம் கோரியிருப்பதாக, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நேற்றுமுன்தினம் செய்தியாளர்களிடம் தகவல் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.