எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவான இளைஞர்களினால் ஒழுங்குபடுத்தப்பட்ட கேள்வி, பதில் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டபோது, அவ்விளைஞர்களால், நீங்கள் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக அண்மையில் கூறியிருந்தீர்கள், கிழக்குமாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிடுவீர்களா எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்தெரிவிக்கையில்,
வடக்கு மகாணசபைத் தேர்தல் நடைபெற முன்னர் சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றிருந்தது. அங்கு மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடவேண்டாம். அது கொள்கைகளுக்கு முரண்பாடாப அமையும் எனக் கூறினோம். நாங்கள் போட்டியிடாதுவிட்டால் அரச ஆதரவுபெற்ற டக்ளஸ் தேவானந்தா மாகாணசபையைக் கைப்பற்ற வாய்ப்பாகிவிடும். அவர் வந்தால் மாகாணசபை ஊடாக ஏதோ பெரிதாக செய்யமுடியும் என ஒரு மாயையை வெளி உலகத்திற்கு இந்த அரசாங்கம் காட்டிவிடும் எனவே போட்டியிடவேண்டும் என கூட்டமைப்பினர் கூறினார்கள்.
அப்போது நாம் மாகாணசபை முறையை ஏற்கமாட்டோம் எனும் வாசகத்தையாவது விஞ்ஞாபனத்தில் முன்வையுங்கள் என்றோம் அவர்கள் அதையும் ஏற்கவில்லை. ஆனால் தற்போது என்ன நோக்கத்திற்காக தாங்கள் போட்டியிடுகின்றோம் எனக் கூறி போட்டியிட்டார்களோ அதிலிருந்து அவர்கள் விலகிவிட்டார்கள். தற்போது அவர்கள் அரசுடன் இணைந்து மாகாணசபையால் எல்லாம் செய்யமுடியும் என்ற ஒரு மாயையை உருவாக்குகிறார்கள். இதனை அம்பலப்படுத்தவேண்டும் என்றால் நாங்களும் களமிறங்கவேண்டிய ஒரு தேவை இருக்கிறது. எனவே கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடப்போகின்றோம் என்றார் அவர்.