தமிழ் மக்களை தலைமைதாங்கி வழிநடாத்துவதற்கு மாற்றுத் தலைமையொன்று உருவாக்கப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று தடம்மாறாத தமிழர்களுக்கு தலைமை ஏற்பது யார் என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டோரால் வட மாகாண முதலமைச்சருக்கு இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசியல் ஆய்வாளர்கள், மதத் தலைவர்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டு தமது கருத்துக்களை வழங்கினர்.
இதன்போது உரையாற்றியவர்கள் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை புறந்தள்ளிவிட்டு புதிதாக ஒரு தலைமை உருவாக்கப்படவேண்டுமென்பதை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இந்நிகழ்வை ஏற்பாடு செய்த குழுவினர் முல்லைத்தீவு மாவட்டத்தைப் புறக்கணித்ததுடன், அங்கிருந்து இந்நிகழ்வுக்கு எவரும் அழைக்கப்படவில்லையெனவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.