தமிழக மீனவர்களை பாதிக்கும் சிறிலங்கா அரசின் கறுப்பு சட்டத்தை திரும்பபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும் வகையில் சிறிலங்கா அரசு கடுமையான தண்டனைப் பிரிவுகள் கொண்ட ஒரு சட்டத்தை அந்நாட்டுப் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த 5.7.2017 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைபட்டினம், ஜெகதாபட்டினம் மற்றும் இன்றைய தினம் ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் உட்பட இதுவரை 53 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, சிறிலங்காவின் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்கள்.
146-க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு, சிறிலங்காவில் சிறை பிடிக்கப்பட்டுள்ளன. இப்படி பல்வேறு இன்னல்களை கொடுத்து வரும் சிறிலங்கா அரசு, தமிழக மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடித் தொழிலை அறவே ஒழித்துக் கட்டும் நோக்கத்தில் இப்போது கொண்டு வந்துள்ள கருப்புச் சட்டம் தமிழகத்திற்கு மட்டுமின்றி, இந்தியாவின் மீன் ஏற்றுமதிக் கொள்கைகளுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
“இந்தியா எங்கள் நட்பு நாடு”, என்று கூறிக்கொண்டே இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையில் 50 ஆயிரம் அபராதம், இருவருடம் சிறை தண்டனை, படகுகள் பறிமுதல் என்று மிகக் கடுமையான கொடுங்கோல் தண்டனைகளைக் கொண்டு வந்திருப்பது நட்பு நாட்டிற்கு இலக்கணம்தானா? என்பதை சிறிலங்கா அரசு ஆழ்ந்து யோசிக்கும் அளவிற்கான ஒரு அழுத்தத்தை தூதரக ரீதியாகவோ, பிரதமர் மட்டத்திலோ மத்திய அரசு அந்நாட்டு அரசுக்குக் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.
அந்த அழுத்தம் கொடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை அ.தி.மு.க. அரசும் உடனடியாக முன்னெடுக்க வேண்டிய கடமை ஏற்பட்டிருக்கிறது. கடிதம் அனுப்புவதால் மட்டும் காரியம் நடந்து விடாது.
ஆகவே, சிறிலங்கா அரசின் கடும் தண்டனை விதிக்கும் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தும் அதேநேரத்தில், கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கிடையில் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு தேவைப்படும் உபகரணங்கள் வாங்க நிதியுதவி, மீனவர்களுக்கான பயிற்சிகள், மீன்களை ஏற்றுமதி செய்வதற்கு ஏற்ற குளிரூட்டு நிலையங்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்து கொடுக்க மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.