யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கான அதிபர் தேர்வில் அரசியல் தலையீடுகள் காரணமாக குழப்பம் நிலவி வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் கொக்குவில் இந்துக்கல்லூரியின் அதிபர் நியமனத்துக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் கிறேற் 1 இனைச் சேர்ந்த ஒருவரே கலந்துகொண்டு சித்தியெய்திருந்தார். அவரை அதிபராக நியமிப்பதற்கு பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் உடன்படவில்லை.
இதனையடுத்து மீண்டும் அதிபர் நியமனத்துக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் இருவர் கலந்துகொண்டனர். இருப்பினும் இருவரையும் பழைய மாணவர் சங்கம் நிராகரித்ததுடன், கிறேற் 2 இல் இருக்கும் ஒருவரை அதிபராக பழைய மாணவர் சங்கம் நியமித்திருந்தது.
இதனை வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் மற்றும் தற்போதை கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் ஆகியோர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனையடுத்து அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதனையடுத்து சி.வி.கே சிவஞானத்திற்கெதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தலையிட்டு இரண்டொரு கிழமைகளுக்குள் சிறந்த தீர்வைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
தற்போது சர்வேஸ்வரன் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டதும் அவர் முதலில் பரீட்சையில் சித்தியடைந்தவரை அதிபராக நியமித்தார். இதனால் பாடசாலையில் குழப்பம் நிலவி வருவதுடன், இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அப்போராட்டம் இறுதியில் கைவிடப்பட்டுள்ளது.