முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் இரண்டு முன்னாள் இராணுவ உயர் அதிகாரிகள், முன்னாள் உயர் அரச அதிகாரி ஆகியோருக்கு எதிராக, சாட்சியம் அளிப்பதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சத்தியக் கடதாசி ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.
முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் மற்றும் ஊழல் முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு முன்பாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச முன்னிலையாகியிருந்தார்.
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் இயந்திரங்களை பழைய இரும்புக்காக வெட்டி அகற்றிய பல மில்லியன் ரூபா மோசடி தொடர்பாகவே அவரிடம் சாட்சியங்கள் பெறப்பட்டன.
இதன் போது, முன்னாள் இராணுவ மற்றும், அரச உயர் அதிகாரிகளுக்கு எதிராக சாட்சியம் அளிப்பதாக, கோத்தாபய ராஜபக்ச சத்தியக்கடதாசி ஒன்றில் ஆணைக்குழு அதிகாரிகள் முன்பாக, கையெழுத்திட்டு வழங்கியுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, யாழ். படைகளின் தலைமையக தளபதிகளாக இருந்த மேஜர் ஜெனரல் உதய பெரேரா, மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, மற்றும் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலராக இருந்த சிறிபால ஹெற்றியாராச்சி ஆகியோருக்கு எதிராகவே சாட்சியமளிப்பதாகவே கோத்தாபய ராஜபக்ச சத்தியக்கடதாசியில் கையெழுத்திட்டுள்ளார்.
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இரும்பு மோசடி தொடர்பாக, மேற்படி இராணுவ மற்றும் அரச அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
அதேவேளை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலரான சிறிபால ஹெற்றியாராச்சி, அளித்த சாட்சியத்தில், பாதகாப்பு செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்சவின் உத்தரவின் பேரிலேயே, சீமெந்து தொழிற்சாலை இயந்திரங்களை வெட்டி அகற்றுவதற்கு தாம் எழுத்துமூல அனுமதி கொடுத்ததாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.