போரினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம், சிங்கள இனங்கள் முன்னுரிமைப்படுத்தப்பட்டு மீள் குடியேற்றம் செய்யப்படுவதால் நேற்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கும் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் மற்றும் ஜெனோபருக்குமிடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன், அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களும் இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நேற்று முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வடமாகாண முதலமைச்சர் தலைமையில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற வேளையில், 1044 தமிழ்க் குடும்பங்களுக்கும் 902 முஸ்லீம் குடும்பங்களுக்கும் 270 சிங்களக் குடும்பங்களும் காணிகளின்றி வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் அனைவருக்கும் விகிதாசார அடிப்படையில் காணிகளை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் முன்வைத்தார்.
இதனையடுத்து, கரைதுரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் 548 முஸ்லீம் குடும்பங்களுக்கு காணிகளை வழங்குவதற்கு காணி கச்சேரிகள் வைக்கப்பட்டு காணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழ் மக்களுக்கான காணி விடயத்தில் எந்த அக்கறையும் செலுத்தவில்லையென்றும் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி எல் வலையம் என்ற திட்டத்தின் கீழ் தமிழ் மக்களின் பூர்வீகக்காணிகளை கையப்படுத்தல், சட்டவிரோத மீன்பிடித்தொழில், காடழிப்பு போன்ற விடயங்களில் எந்தவித கரிசனைகளும் காட்டாத அமைச்சர் இந்த விடயத்தில் மாத்திரம் அக்கறை செலுத்துவது பொருத்தமற்ற ஒன்று எனவும் மாகாணசபை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
இதனையடுத்து அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கும், வடமாகாண சபை உறுப்பினர்களான ரவிகரன் மற்றும் ஜெனோபருக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு வாய்த்தரக்கமாக மாறியது. சுமார் ஒரு மணித்தியாலமாக இத்தகராறு ஏற்பட்டுள்ளதாகவும், இதில் தகாத வார்த்தைப் பிரயோகங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் பூர்வீகமாக வாழ்ந்த மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களது வாழ் வாதாரத் தொழில்கள் குறித்து எந்தவித கரிசனைகளும் காட்டாத அரச தரப்பு அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் வெளியிடங்களில் இருந்து வருகின்ற பெரும்பான்மையினத்தவர்களுக்கு அனைத்தையும் வழங்கி வருகின்றனர் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்தினாலும் சுனாமியாலும் பாதிப்புக்களைச் சந்தித்த மக்கள் சமூகம் தொடர்ந்தும் துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் இவ்வாறான பராபட்சம் காட்டுவதை அதிகாரிகளும் அரச தரப்பு அரசியல் வாதிகளும் தவிர்த்துக்கொண்டு முஸ்லீம் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் காட்டுகின்ற கரிசனைபோல் தமிழ் மக்களின் உரிமைகளுக்கு காட்டவேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறிஸ்கந்தராஜா ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.