டெல்லியில் நீதிபதிகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கில், 3 பேருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியின் சாகெத் மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதிகளான அஜய் கார்க், எம்.கே.நாக்பால் மற்றும் இந்தர்ஜீத் சிங் ஆகியோர் கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் 17-ம்திகதி பரிதாபாத் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, தெற்கு டெல்லியின் தக்சின்பூர் அருகே சென்றபோது, கார் மீது ஒரு பைக் மோதியது. அதில் வந்த இரண்டு பேரும் கீழே விழுந்துள்ளனர். இதனால் அவர்கள் இருவரும், கார் சாரதியுடன் தகராறில் ஈடுபட்டனர்.
அவர்களை நீதிபதிகள் சமாதானப்படுத்தியும் சமாதானம் ஆகவில்லை. அத்துடன் மேலும் இரண்டு நபர்களை வரவழைத்து, நீதிபதிகளை தாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக 4 பேர் மீதும் டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 3 பேர் விசாரணையை எதிர்கொண்ட நிலையில், ஒருவர் மட்டும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி ஆர்.கே.திரிபாதி நேற்று(11) தீர்ப்பு வழங்கினார். அப்போது நீதிபதிகளை தாக்கிய 3 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிப்பதாக அறிவித்தார். மேலும், காரை சேதப்படுத்தியதால் நீதிபதி அலுவலகத்திற்கு 45 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
‘வழக்குகளில் தீர்ப்பு வழங்கும்போது ஒரு தரப்பினருக்கு எதிராக அமைகிறது. இதன் காரணமாக சில சமயங்களில் நீதிபதிகள் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியிருக்கிறது. அத்துடன், சமூகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்ற செய்தியையும் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை எந்த விதத்திலும் மன்னிக்க முடியாது’ என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.