மாகாணசபைகளில் பெண்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவத்தை அளிக்கும் வகையிலான, மாகாணசபைகள் திருத்தச் சட்டமூலம், நேற்றுமுன்தினம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
1988ஆம் ஆண்டின் 2 ஆவது இலக்க மாகாணசபைகள் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கு இந்த சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடும் அனைத்துக்கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் தமது வேட்பாளர் பட்டியலில் குறைந்தபட்சம் 30 வீதம் பெண் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு குறைந்தபட்ச பெண் வேட்பாளர்களை உள்ளடக்காத எந்த வேட்புமனுவையும் நிராகரிக்கும் அதிகாரத்தை தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு, இந்த சட்டமூலம் அளிக்கிறது.
இது தொடர்பாக, வர்த்தமானி அறிவிப்பை உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா வெளியிட்டுள்ளார்.
அரசியல் முடிவுகளை எடுக்கும் அனைத்து சபைகளிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியான முடிவை எடுத்துள்ளது.
முதற்கட்டமாக, கடந்த மார்ச் மாதம், உள்ளூராட்சித் தேர்தலில் பெண்களுக்கு 25 வீத இடங்களை ஒதுக்கும் வகையில் உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தற்போது சிறிலங்காவில் மாகாணசபைகளில் 4 வீதமும், நாடாளுமன்றத்தில் 5 வீதமுமே பெண்களின் பங்களிப்பு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.