நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக தமிழ் மக்களுக்கு விளக்கமளிப்பதற்காக இன்று காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கிளிநொச்சிக்குப் பயணம் செய்யவுள்ளார்.
இதற்கான ஏற்பாட்டினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஒழுங்கமைத்துள்ளார்.
இன்று காலை கிளிநொச்சிக்குப் பயணம் செய்யும் இரா.சம்பந்தன் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.
இன்று காலை 9.00 மணிக்கு பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கவுள்ள இரா.சம்பந்தன் 10 மணிக்கு கிளிநொச்சி நகரத்தில் நடைபெறும் கூட்டத்தில் மக்களுக்குத் தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து விளக்கவுரை ஆற்றவுள்ளார்.
இன்று மாலை 4 மணிக்கு வட்டக்கச்சி மகா வித்தியாலய வைர விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்வார். நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார். இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் கலந்துகொள்ளவுள்ளார்.
நிகழ்வை முடித்துக்கொண்டு இன்று மாலையே எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கொழும்பு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.