கம்பியின் பிடியில் கட்டுப்பட்டுக்
கிடப்பது கண்காட்சிப் பொருளல்ல
காலத்தின் பறவை – அது
கரி காலனின் பறக்கும் குதிரை
பிரபஞ்ச ஏட்டில்
முதல் முதல் பறக்கக் கற்றுக்கொடுத்த
இனத்தின் கலியுகப் பறவை
இதுதான் மக்காள் இதுதான்
எங்களை தலை நிமிர வைத்துவிட்டு
இன்று தலைகுனிந்து கிடக்கிறது
பார் தமிழா கவிண்டு
கிடந்தாலும் கம்பீரம் குறையவில்லை
காரணம் அது எம் வீரன் ரூபனின்
கைபட்டதால் வந்த கர்வம்
எட்டுநாடுகள் இணைந்து
கட்டிப்போட்ட மேக வெளியை
சற்றும் மதிக்காது
சமர் செய்து வென்ற
ஜடாயு – இது
பிரபாகன் சொல்லிற்காய் பறந்தது
இந்த துரோக இனத்துக்காய் வீழ்ந்தது
மார்பில் ஏறிய குண்டை
எடுத்து மக்களுக்கு காட்டியிருக்கிறான்
பகையே நீ வாழ்க!!
இன்று நீ தொங்கவிட்டிருப்பது
தோல்வியின் எச்சமல்ல
எம் வீரத்தின் உச்சம்!
கொலன்னாவ பற்றி எரிகையில்த்தானே
பலருக்கு
தமிழர் மரணத்தில் இரக்கம் வந்தது
அனுராத புரத்தில் வெடிகள்
வெடித்தபோதுதானே
எம் மக்கள் பட்ட அவலம் புரிந்தது
இருபது விமானங்கள் வைத்திருந்தும்
உன்னால் இலக்கை தாக்க முடியவிலை
மூடா இரண்டே இரும்பு பறவை
இதுதான் உன் இருப்பை சிதைத்தது மறவாதே!
துரோகம் பெய்த சிறுநீரில்
எம் கழுத்து வரைக்கும் தாண்டபின்னர்
தலையை காக்க தயாரான
கடைசி ஆயுதம் இது என்பது
எத்தனை பேருக்குத் தெரியும்
கண்ணீர் மல்க அண்ணனை
காப்பாத்துங்கோ என
கடிதம் எழுதிவிட்டு
வான் கரும்புலியாய் வெடிக்கப்
பறந்த வீரர் சுமந்த வாகனம் இது
எத்தனை பேர் அறிவார்
என் இனமே
தற்கால நிம்மதிக்காய்
பெருமூச்சு விடாதே எல்லாம்
இன்னொரு விசப் பரீட்சையில்
மாறிப்போகும்
அப்படி தற்கால நிம்மதி உனக்கு
பிடித்துப்போனால்
உன் தலையணை கொடுத்தது
இந்தத் தகடுகள் என்பதை
மறவாதே
– அனாதியன்