மேற்கு ஆபிரிக்காவின் கமரூன் பகுதியில் இரு தற்கொலை குண்டுதாரிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 30 பேர்வரை படுகாயமடைந்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளன.
நைஜீரிய எல்லைப் பகுதியான வாஸா நகரில் உள்ள சனநெரிசல் அதிகம் நிறைந்த சந்தைத் தொகுதியொன்றில் நேற்று குறித்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தாக்குதலையடுத்து குறித்த நகரம் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு, நகரத்திலிருந்து மக்கள் வெளியேறுவதற்கும், உள்நுழைவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தாக்குதலில் படுகாயமடைந்தவர்களில் பெரும்பாலானோரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நைஜீரியாவில் பொகோஹராம் போராளிகள் பொதுமக்களை குறிவைத்து தொடர்ச்சியாக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்ற நிலையில், இத்தாக்குதலும் பொகோ ஹராமினால் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கமரூனில் வன்முறைக்கு பயந்து சுமார் 2 இலட்சம் மக்கள் தங்கள் சொந்த இடங்களைவிட்டு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.