மாற்றுத் தலைமையாகச் செயற்பட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இணங்காவிட்டால் நாம் வேறு ஒரு தலைமையையோ அல்லது கூட்டுத் தலைவர்களையோ உருவாக்கக்கூடும் என ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்புக்குப் பயணம் செய்த சுரேஸ் பிரேமச்சந்திரன் அங்கு பத்திரிகையாளர்களுக்கு நிகழ்கால அரசியல் தொடர்பாக விளக்கமளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மாற்றுத் தலைமை அவசியமில்லையெனவும், பிரச்சனைகள் இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேசித் தீர்க்கலாம் எனத் தெரிவிக்கின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த தேர்தல் அறிக்கையிலிருந்து அதனுடைய தலைமை விலகி நடக்கிறது என்ற கருத்தையும் முன்வைத்திருந்தார். வடக்கு- கிழக்கு இணைப்பு, கூட்டாட்சி, தமிழ் மக்களுக்கான சுயாட்சி என்பன தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள். தற்போது இவை ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விடயமாகத் தமிழ் அரசுக் கட்சி கைவிட்டுள்ளது. ஆனால் நான் அந்த வியடங்களில் உறுதியாக இருக்கின்றேன் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
வடக்கு மாகாணசபையினால் தீர்வுத் திட்டம் வெளியிடப்பட்டது. அந்தத் தீர்வுத் திட்டத்தின் அடிப்படையிலும், ஏற்கனவே முன்வைத்த தேர்தல் அறிக்கையின் அடிப்படையிலும் செயற்படுவதானால் மாற்றுத் தலைமை அவசியம்.
வடக்கு மாகாண முதலமைச்சர் தற்போது மாற்றுத் தலைமை தேவையில்லை எனக் கூறியது அவரது சொந்தக் கருத்து. ஆனாலும், வடக்கு மாகாண சபையின் தீர்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அவருக்கு மாற்றுத் தலைமை தேவை.
மாகாண சபை முதலமைச்சராகத் தன்னைக் கொண்டு வந்ததில் சம்பந்தன் மிகப்பெரிய பங்கு வகித்துள்ளார். ஆகவே நான் அவருக்கு விரோதமாக நடக்கக் கூடாது என்று முதலமைச்சர் விக்கினேஸ்வரன் நினைத்திருக்கலாம். இது சம்பந்தன் தொடர்பான விடயமல்ல. அரசியல் தீர்வு சம்பந்தப்பட்ட விடயம். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது, எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பான விடயம்.
தமிழ் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் சகலதும் தமிழ் அரசுக் கட்சியால் கைவிடப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் எவ்வாறான அரசியல் தேவை என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.
வடக்கு மாகாணசபை, தமிழ் மக்கள் பேரவை இரண்டினதும் தீர்வுத் திட்டம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது தேர்தல் அறிக்கை, இவை மூன்றிலுமிருந்து முற்று முழுதாக விலகிய தீர்வுத் திட்டதால் எந்தப் பயனும் இல்லை. இந்த மூன்று திட்டங்களிலுமிருந்தும் தமிழ் அரசுக் கட்சி தடம் மாறிச் செல்கிறது என்பது உண்மை – என்றார்.