சீனாவில் ஜனநாயகம் தொடர்பான ‘சார்ட்டெர் 8’ என்ற நூலை கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியிட்ட காரணத்துக்காக அந்நாட்டின் பிரபல எழுத்தாளரான லியு சியாபோ (61), என்பவருக்கு சீன அரசு 11 வருட சிறைத் தண்டனை விதித்தது.
கடந்த 2010-ம் ஆண்டு அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனால் சீனாவுக்கும் நோபல் பரிசை அளித்துவரும் நோர்வே நாட்டுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு சமீபத்தில்தான் சீரடைந்தது.
இதற்கிடையே, ஈரல் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் லியு சியாபோ பரோலில் விடுவிக்கப்பட்டார். ஆனால், வெளிநாட்டில் இருந்து சிறப்பு நிபுணர்களை வரவழைத்து அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சீன அரசு நிராகரித்து விட்டது.
ஷென்யாங் நகரிலுள்ள சீன மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஈரல் புற்றுநோய் முற்றிய கட்டத்தில் கடந்த மே மாதம் அனுமதிக்கப்பட்டிருந்த லியு சியாபோவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது ஈரலில் இருந்த புற்றுக்கட்டி உடைந்து இரத்தக்கசிவு ஏற்பட்டதால் லியு சியாபோ கவலைக்கிடமான நிலையில் இருந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லியு சியாபோ, நேற்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது மரணத்துக்கு உலக நாடுகளில் உள்ள முக்கிய தலைவர்களில் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நார்வே நாட்டில் உள்ள நோபல் பரிசு கமிட்டியின் தலைவரான பெரிட் ரீய்ஸ்-ஆண்டர்சன் என்ற பெண் லியு சியாபோவின் இறுதி சடங்கில் பங்கேற்க விரும்பினார். இதற்காக அவசர விசா வேண்டி ஓஸ்லோ நகரில் உள்ள சீன தூதரகத்தில் அவர் விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக சீன தூதரக அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.
’யாருடைய அழைப்பின் பேரில் நீங்கள் சீனாவுக்கு செல்கிறீர்கள்?, எந்த விமானத்தில்பணய சீட்டை முன்பதிவு செய்திருக்கிறீர்கள்? சீனாவில் எந்த ஓட்டலில் தங்க அறை எடுத்திருக்கிறீர்கள்? என்பது போன்ற விபரங்கள் எதுவும் குறிப்பிடப்படாததால் உங்களது விசாவுக்கான விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படுகிறது’ என தூதரக அதிகாரிகள் தெரிவித்து விட்டதாக நோபல் பரிசு கமிட்டியின் தலைவர் பெரிட் ரீய்ஸ்-ஆண்டர்சன் இன்று தெரிவித்துள்ளார்.