வடமாகாண போக்குவரத்துத் துறை அமைச்சர் டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு ரெலோ அமைப்பு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
ரெலோ அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் டெனீஸ்வரன் அண்மையில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட்டிருந்தார். ஆனால் ரெலோ அமைப்பானது வடமாகாண முதமைச்சருக்கு ஆதரவாக இருந்து வந்தது.
அதற்கமைய கட்சியின் நிலைப்பாட்டிற்கு புறம்பாகவும் மாறாகவும் பா.டெனிஸ்வரன் செயற்பட்டுள்ளார் என்பதால் கட்சியின் அமைப்பு விதிகளின் பிரகாரம், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சி தீர்மானித்துள்ளதாகவும் தமது கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வட மாகாண சபையில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதற்கான சகல தகுதிகளையும் அவர் இழந்துவிட்டிருப்பதாக கட்சி தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தமது கட்சியை மீறி அமைச்சர் டெனீஸ்வரன் செயற்பட்டதால் அவரைக் கட்சியிலிருந்து நீக்கும் முடிவை ரெலோ அமைப்பு எடுத்துள்ளதாகவும், அவருக்குப் பதிலாக ரெலோ அமைப்பினால் நியமிக்கப்படும் புதிய ஒருவரை அப்பதவிக்கு நியமிக்குமாறும் வடமாகாண முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.