புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட கோரி 100 கிராம மக்கள் இன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
விவசாயத்துக்கு சாவு மணி அடித்துவிட்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தங்கள் ஊரில் செயல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் 95 நாள்களாக போராடி வருகின்றனர். ஆனால் மத்திய அரடோ செவிமடுத்து கேட்கவில்லை.
இன்று வரை முடியாமல் உள்ள இந்த போராட்டத்தை பெரிய அளவுக்கு முன்னெடுத்து செல்ல மக்கள் முடிவு செய்தனர். அதன்படி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மாலை புதுக்கோட்டையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரினர். ஆனால் காவல் துறை அனுமதி மறுக்கப்பட்டது.
அதனால் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அனுமதி பெற்று தடிகொண்ட அய்யனார் திடலில் ஆர்ப்பாட்டம் இன்று (15) மாலை நடைபெறவுள்ளது. அதில் 100 கிராம மக்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக அப்பகுதி மக்கள் 50 வேன்கள், 20-க்கும் மேற்பட்ட கார்கள், 100-க்கும் மேற்பட்ட சைக்கிளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தும் இடத்துக்கு புறப்பட்டு விட்டனர். இதனால் நெடுவாசலில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
நாடியம்மன் கோயில் திடலில் திரண்ட நெடுவாசல் மக்கள் எங்களை வாழ விடு.. ஹைட்ரோ கார்பன் சைத்தான் வேண்டாம்.. விவசாயம் வேண்டும் என்று முழக்கமிட்ட விவசாயிகள்..
சிறப்பு வழிபாடு நடத்தி சிதறு தேங்காய் உடைத்து.. இதே போல ஹைட்ரோ கார்பன் திட்டமும் இன்றோடு சிதற வேண்டும் என்று வழிபாடு நடத்திவிட்டு வாகனங்களில் புறப்பட்டனர்.
பேராவூரணி தொகுதியில் இருந்து சுமார் 200 வாகனங்களில் சென்றவர்கள் கைகாட்டியில் நிறுத்தி முழக்கமிட்டனர். போராட்டம் நடைபெறவுள்ள இடத்தில் திருச்சி டிஐஜி, எஸ்பி, 3 ஏடிஎஸ்பி க்கள், 800 போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.