அமெரிக்காவும் இந்தியாவும் பல்வேறு துறைகளில் நட்புறவை பலப்படுத்தும் வகையில் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இவற்றில் தீவிரவாதத்தை ஒழிக்கும் போர், ராணுவத்துறை ஒத்துழைப்பு போன்றவை முக்கியமான அம்சங்களாகும். இந்தியாவுக்கு தேவையான அதிநவீன போர் கருவிகளை வழங்குவது, இந்தியா-அமெரிக்கா முப்படை வீரர்கள் இடையே கூட்டுப்போர் பயிற்சி ஆகியவற்றுக்காக தனி ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்தியாவுடன் ராணுவ கூட்டுறவை பலப்படுத்தும் வகையில் வரும் நிதியாண்டில் 621.5 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீட்டுக்கு அமெரிக்க பாராளுமன்றம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கான சட்டமுன் வடிவத்தை (மசோதா) இந்திய-அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினரான அமி பேரா நேற்று தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவை நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே அறிமுகப்படுத்தி உரையாற்றிய அமி பேரா, ‘உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாடாக அமெரிக்காவும், மிகப் பெரிய ஜனநாயக நாடாக இந்தியாவும் திகழ்ந்து வருகின்றன. எனவே, நம் இரு நாடுகளுக்கிடையே ராணுவ ஒத்துழைப்பை பலப்படுத்துவது தொடர்பாக நாம் அதிக முன்னுரிமை அளிக்க வேண்டியுள்ளது.
நமது பாதுகாப்பை பலப்படுத்துவதுடன் 21-ம் நூற்றாண்டில் நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை சந்திக்கவும் இந்தியாவுடனான கூட்டுறவு பெருந்துணையாக அமையும்’ என்று குறிப்பிட்டார்.
பின்னர், தேசிய பாதுகாப்பு (தொடர்பான) அதிகாரமளித்தல்-2018 என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா மீதான குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. மசோதாவுக்கு ஆதரவாக 344 எம்.பி.க்களும், எதிராக 81 எம்.பி.க்களும் வாக்களித்தனர். இதனையடுத்து இந்த மசோதா நிறைவேறியது.
இதனையடுத்து, பாராளுமன்ற மேல் சபையிலும் இந்த மசோதா வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டதும் இந்த மசோதா சட்ட வடிவம் பெறும்.
அதன்பிறகு, இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 621.5 பில்லியன் டாலர் நிதியை கொண்டு அமெரிக்கா-இந்தியா இடையிலான ராணுவ கூட்டுறவை பலப்படுத்துவது எப்படி? என்பது தொடர்பான செயல் திட்டத்தை இன்னும் ஆறுமாத காலத்தில் அமெரிக்க ராணுவத்துறை மற்றும் வெளியுறவுத்துறை மந்திரிகள் உருவாக்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.