அரசாங்கம் போர் நிறுத்தம் அறிவித்து சில மணி நேரத்தில் பொதுமக்கள் படுகொலை
இன்றைய நாளில் 13-04-2009 அன்று திங்கட்கிழமை புதுவருடத்தை முன்னிட்டு தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கின்ற போதிலும் நள்ளிரவு முதல் இன்று பிற்பகல் 4:00 மணி வரை ‘மக்கள் பாதுபாப்பு வலய’ பகுதிகள் மீது கடுமையான எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ளனர். இத்தாக்குதல்களில் 287 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 346 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தாக்குதல் நடவடிக்கைகளை மட்டுப்படுத்துமாறு சிறிலங்கா அரச தலைவர் படையினருக்கு நேரடியாகவே உத்தரவிட்டிருப்பதாக சிறிலங்கா அரச தரப்புச் செய்திகள் தெரிவித்திருந்த போதிலும் 12.04.2009 நள்ளிரவு 12:00 மணி முதல் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களை மக்கள் அதிகமாகவுள்ள பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ளனர்.
அன்று காலை முதல் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னரண் பகுதி மீது தொடர்ச்சியான தாக்குதல்களை தொடங்கியுள்ள சிறிலங்கா படையினர் பொதுமக்கள் அடைக்கலம் புகுந்திருக்கும் பகுதிகளை நோக்கியும் வழமைபோலவே எறிகணைத் தாக்குதல்களைப் பெருமளவுக்கு மேற்கொண்டு வந்தார்கள்.
மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதிகளான அம்பலவன்பொக்கணை புதுமாத்தளன் முள்ளிவாய்க்கால் வலைஞர்மடம் மற்றும் இடைக்காட்டு ஆகிய பகுதிகளை நோக்கி நள்ளிரவு முதல் எறிகணை பல்குழல் வெடிகணை மோட்டார் பீரங்கி மற்றும் தொலைதூர துப்பாக்கி தாக்குதல்களை சிறிலங்கா படையினர் நடத்தியிருந்தார்கள்.
அன்று பிற்பகல் 4:00 மணிவரையில் நடைபெற்ற தாக்குதல்களில் 287 பொதுமக்கள் பரிதாபகரமாக கொல்லப்பட்டுள்ள அதேவேளையில் 346 பேர் படுகாயமடைந்த நிலையில் அங்குள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்குக் கொண்டுவரப்பட்டார்கள்.
-மீள் பதிவு