லண்டனில் அமிலம் வீசி தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 16 வயது நிரம்பிய சிறுவன் மீது 15 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
களவு, கடும் உடற்சேதம் ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டமை மற்றும் ஆபத்தான பொருளை தன்வசம் வைத்திருந்தமை என்பன மேற்படி குற்றச்சாட்டுக்களில் உள்ளடங்கும்.
கடந்த வியாழக்கிழமை இரவு நடத்தப்பட்ட குறித்த அமிலத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், இருவர் கைது செய்யப்பட்டனர்.
அவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரில் 15 வயது நிரம்பிய ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், 16 வயது நிரம்பிய மேற்குறிப்பிட்ட சிறுவன் நாளை (திங்கட்கிழமை) ஸ்ராட்ஃபோர்ட் யூத் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹக்னி, ஸ்டோக் நிவிங்டன் மற்றும் இஸ்லிங்டன் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட ஐந்து அமிலத் தாக்குதல்கள், ஒன்றுடனொன்று தொடர்புடையவை என சந்தேகிக்கப்படும் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் குறைந்தது ஐவர் காயமுற்றுள்ளதாகவும் அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.