கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் பயனாளிகளாகத் தெரிவு செய்யப்பட்டு பின்னர் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சமுர்த்தி பயனாளிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் கரைச்சி பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்றது. இதன்போது பாதிக்கப்பட்ட பயனாளி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,
“எதுவித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் வாழ்ந்து வரும் எமக்கு இந்த சமுர்த்தி தெரிவின் மூலம் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அனைவருமே யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள்தான்.
எனினும் எமது நிலைமைகளை எமது கிராமத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டால் தெரியும். குழந்தைகளுடன் சிறிய தகரக் கொட்டில்களில் கஸ்ரங்களை அனுபவித்து வாழ்ந்து வருகின்றோம்.
எந்தவித அடிப்படை வசதிகளுமற்று வாழ்ந்து வரும் எமக்கு சமுர்த்திக் கொடுப்பனவுகள் இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் கரைச்சி பிரதேச செயலாளர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடியதுடன், குறித்த பயனாளர் தெரிவை மீள்பரிசீலணை செய்வதாக தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.