கலாம் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டு வரும் மணி மண்டபம் எதிர்வரும் 27ஆம் திகதி திறக்கப்பட்ட உள்ள நிலையில், அதன் பணிகளை மத்திய பாதுகாப்பு ஆராய்சி மைய மேம்பாடு நிறுவனத்தின் இயக்குநர் கிரிஸ்தோபர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே, அவர் இந்தத் தகவலைக் கூறினார்.
அங்கு மேலும் குறிப்பிட்ட கிரிஸ்தோபர், ‘மறைந்த கலாம் அவர்கள் தனது சிறந்த கண்டு பிடிப்புகளின் மூலம் மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்திற்கு பெரும் உதவிகளை வழங்கியிருக்கிறார். அவரை பெருமைப்படுத்தும் வகையில் அவரது நினைவிடத்தை மிகச்சிறப்பாக அமைத்து வருகிறோம்.
கலாம் அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் அவரது நினைவிடத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதல் கட்டமாக கலாம் பயன்படுத்திய புத்தகங்களை கொண்ட நூலகம் அமைக்கப்பட உள்ளது. தொடர்ந்து அறிவுசார் மையம், கோளரங்கம் என பல வசதிகளை இங்கு ஏற்படுத்தும் திட்டம் உள்ளது. அதற்கு தேவையான கூடுதல் நிலத்தினை தமிழக அரசிடம் கேட்டுள்ளோம். அவை கிடைத்தவுடன் அடுத்த கட்ட பணிகள் ஆரம்பிக்கப்படும்.
கலாம் நினைவிட பணிகள் குறைந்த நாட்களில் மிக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. கலாம் நினைவிடத்தை உலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் காண வருவார்கள். அவர்கள் கலாமின் பெருமைகளை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட இதனை திறந்து வைக்க பிரதமரை அழைத்துள்ளோம். எங்கள் அழைப்பை ஏற்று பிரதமர் இந்நிகழ்வில் பங்கேற்பார் என நினைக்கிறோம்’ என்றார்.
இதன் பின் ராமநாதபுரம் ஆட்சியர் நடராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவன கட்டுமான பிரிவு பொறியாளர் பி.கே.சிங் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.