ஏறாவூரில் இவ்வருட ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 552 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், அவர்களுள் 90 வீதமானோர் மாணவர்கள் என ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி கலையரசி துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஏறாவூர் பிரதேச செயலகப் பிரிவின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவித்த அவர், ”கடந்த வருடம் டெங்கு நோயினால் வெறும் 19 பேரே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வருடம் கடந்த ஏழு மாதங்களில் மாத்திரம் 552 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஏறாவூரில் டெங்கு நோயினால் பெரிதும் மாணவர்களே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாடசாலை நிர்வாகங்கள் தங்களது சுற்றுச்சூழல் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்படல் அவசியமாகும்.
இந்நிலையில், நாம் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். மக்கள் மத்தியில் மேலும் விழப்புணர்வை அதிகரிக்க வேண்டும்.” என்றார்.