இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் யாழ்ப்பாணத்தில் வட. மாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுநர் உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சிங்கப்பூர் தேசிய நூலக சபையினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட நூல்களை யாழ். பொதுநூலகத்துக்கு கையளிக்கும் நிகழ்விலும் அவர் பங்கேற்கவுள்ளார்.
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் ஐந்து நாள உத்தியோகப்பூர்வ விஜயமாக நேற்று (திங்கட்கிழமை) இலங்கையை வந்தடைந்தார்.
நேற்றைய தினம் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளை நகரசபை மண்டபத்தில் சந்தித்த சிங்கப்பூர் அமைச்சர், அந்நாட்டு இராஜதந்திர அடிப்படை கொள்கைகள் குறித்து கலந்துரையாடினார்.
இந்நிலையில், இன்றைய தினம் வெளிவிவகார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடுவார் எனக் கூறப்படுகிறது.