கடந்த 2001 ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழகச் சட்டசபைத் தேர்தலின் போது 4 தொகுதிகளில் போட்டியிட, ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்தமைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று முடித்து வைக்கப்பட்டது.
குறித்த தேர்தலில் கிருஷ்ணகிரி, புவனகிரி, ஆண்டிப்பட்டி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் 2 தொகுதிகளுக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்வது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது எனக்கூறி குப்புசாமி எம்.பி. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை சென்னை உயர் நீதிமன்றில் விசாரிக்குமாறு உத்தரவு பிறப்பித்த காரணத்தால், வழக்கு சென்னையில் நடைபெற்றது.
இந்த வழக்கு விசாரணையின் போதே மனுதாரரான குப்புசாமி எம்.பி. காலமானார். எனவே மனுதாரரின் மரணத்தை காரணம் காட்டி சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
ஆனால், இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என நாகப்பட்டினம் தொகுதி முன்னாள் எம்.பி.யான ஏ.கே.எஸ்.விஜயன் உச்ச நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதற்கமைய மன்றும், ஜெயலலிதா மீதான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தது.
இந்நிலையில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்காக பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால் விசாரணை தொடங்கியதும், ஜெயலலிதா காலமாகி விட்டதால் தற்போது இந்த வழக்கு காலாவதியாகி விட்டது எனக்கூறி நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்துள்ளனர்.