படித்து நாட்டுக்கு சேவை செய்ய இருந்த எமது பிள்ளைகளை பணத்துக்காக கடத்திச் சென்றனர். எம்மிடம் கோடிக்கணக்கில் கப்பம் கோரினர். இதுவரை அவர்கள் தொடர்பில் எந்த தகவல்களும் இல்லை.
கடற்படையினரே இந்த கடத்தல்களுடன் தொடர்புடையவர்கள் என்பதை குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைகள் ஊடாகவே நாம் அறிந்தோம். தற்போது சில அரசியல்வாதிகள் எமது பிள்ளைகளை பயங்கரவாதிகளாக சித்திரிக்க முற்படுகின்றனர்.
8 வருடங்களாக நாம் எமது பிள்ளைகளை தேடுகின்றோம். அவர்கள் எங்கே? தயவு செய்து இந்த விடயத்தில் அரசியல் சாயம் பூசாது, எமக்கான நியாயத்தைப் பெற்றுத்தாருங்கள் என்று கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடத்தப்பட்ட ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின் உறவினர்கள் நேற்று கண்ணீர் விட்டு கதறியழுது வேண்டுகோள் விடுத்தனர்.
கொழும்பு – நிப்போன் ஹோட்டலில் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்திய அவர்கள் அரசாங்கத்திடம் இந்த வேண்டுகோளை விடுத்ததுடன் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல அனுமதிக்குமாறும் அவர்களுக்கு இடையூறு செய்யும் வகையிலான அரசியல் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.
2008ம் ஆண்டு கொழும்பில் வைத்து கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரும் விடுதலை புலிகள் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச ஊடகங்களிடம் தெரிவித்த கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக , காணாமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோர்கள் இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே கண்ணீருடன் குறித்த உறவுகள் மேற்படி விடயத்தை வெளிப்படுத்தினர்.
காணாமல் ஆக்கப்பட்ட ரஜீவ் நாகநாதனின் தாய் சரோஜினி நாகநாதன்:
2008 செப்டம்பர் மாதம் 17ம் திகதி எனது மகன் கடத்தப்பட்டார். எனக்கு இருந்தது ஒரே ஒரு மகன். உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல இருந்த நிலையில் அவன் கடத்தப்பட்டான். திலகேஸ்வரன், டிலான் ஆகிய தனது இரு நண்பர்களுடன் அவன் வீட்டில் இருந்து காரில் சென்றபோதே, தெஹிவளையில் வைத்து கடத்தப்பட்டுள்ளான்.
கடற்படையினரால் அவன் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த போது தொலைபேசி ஊடாக எங்களுடன் கதைத்தும் உள்ளார். அவர்கள் பேசும் தொலைபேசி இலக்கத்துக்கு நாமே ரீலோட்டும் செய்துள்ளோம். மகனை விடுவிக்க என்னிடம் ஒரு கோடி ரூபா கப்பம் கோரப்பட்டது. நான் 75 லட்சம் ரூபாவுடன் நாரம்மலைக்கு செல்ல முற்பட்ட போது அப்போதைய அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவின் அறிவுறுத்தலுக்கு அமைய நான் அங்கு செல்லவில்லை.
பீலிக்ஸ் பெரேரா அப்போது கடற்படை தளபதி கரன்னாகொடவுடன் பேசி, எனது மகனை விடுவிக்க நடவடிக்கை எடுத்திருந்தார். எனினும் இன்று வரை எனது மகன் விடுவிக்கப்படவில்லை.இன்று அரசியல் வாதிகள், கடத்தல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய தஸநாயக்க எனும் கடற்படை அதிகாரியைக் கைது செய்ததும், தஸநாயக்கவின் பிள்ளைகள், மனைவி அழுவதாக பேசுகின்றனர்.
உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள். கடந்த 8 வருடங்களாக நாம் அழுத அழுகையும், உங்களிடம் விடுத்த வேண்டுகோள்களும் உங்களுக்கு தெரியவில்லையா?. எமது பிள்ளைகளுக்காக நாமும் இப்படித் தானே 8 வருடங்களாக அழுது கொண்டிருக்கின்றோம்.
எனது மகனை கடத்திச் சென்று முதலில் வெலிசறை முகாமில் வைத்திருந்தனர். பின்னர் சைத்திய வீதியில் உள்ள மறைவிடத்திலும், பின்னர் திருமலை இரகசிய முகாமிலும் வைத்திருந்தனர். இவை சம்பத் முனசிங்க, ஹெட்டி ஆராச்சி மற்றும் ரணசிங்க ஆகியோரின் கீழேயே இடம்பெற்றன. இதனை மகன் எனக்கு தொலைபேசியில் கதைக்கும் போதே தெரிவித்தார். தயவுசெய்து எமது பிள்ளைகளை எம்மிடம் தாருங்கள் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இதன் போது கடத்தப்பட்ட ஐவரில் உள்ளடங்கும் டிலான் மொஹம்மட் எனும் மாணவனின் பெற்றோர் பேசுகையில்:
எமது பிள்ளையைக் கடத்தியவர்கள் கடற்படையினர் என்பது தெரியவந்த போது மிக கவலையாக இருந்தது. ஏனெனில் நாமும் இராணுவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எனது கணவர் ஓய்வுபெற்ற இராணுவ வீரர். எனினும் இவ்வாறான கடத்தல்களை ஒரு போதும் உண்மையான இராணுவ வீரர்கள் புரியமாட்டார்கள்.
எமது பிள்ளைகள் புலிகள் இல்லை. அதனை நான் அடித்துச் சொல்வேன். எனது மகன் புலி என நிரூபித்தால் நான் எனது முறைப்பாட்டை மீளப் பெற்றுக்கொள்வேன். அப்பாவிகளை கடத்தி காணாமல் ஆக்கியவர்களுக்கு எதிராக நடவடிக்கை வேண்டும்.
எமது பிள்ளைகளை கடத்தியோரை நாம் அடையாளம் காணவில்லை. ஆனால் புலனாய்வுப் பிரிவினரே, கடற்படை அதிகாரிகளின் சாட்சியங்களுக்கு அமைவாகவே அவற்றை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர். அதன்படி கைது செய்யப்பட்டுள்ளவர்கள் எமது பிள்ளைகளை கடத்தியமைக்கு பொறுப்புக் கூற வேண்டும்.
தயவு செய்து அரசியல் இலாபத்துக்காக எமது பிள்ளைகளைப் பயன்படுத்த வேண்டாம் எனக் கோரினார்.
இதனையடுத்து தனது கணவன் மற்றும் மகன் ஆகியோர் கடற்படையினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் சம்சுன் நிஹாரா எனும் பெண் ஊடகங்களுக்கு பேசினார்.
தனது காதலியுடன் வானில் போகும் போது எனது மகன் 2008.09.11ம் திகதி கடத்தப்பட்டார். பின்னர் வீட்டுக்கு வந்தவர்கள் எனது கணவரை 2008.10.17ம் திகதி கடத்திச் சென்றனர். மகன் கணவர் இருவர் தொடர்பிலும் இதுவரை தகவல் இல்லை.
என்னிடம் மகனையும் கணவரையும் விடுவிக்க கடற்படையின் அண்ணாச்சி என தன்னை அறிமுகம் செய்த ஒருவர் கப்பம் கோரினார். 15 லட்சம் கோரினார். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றேன். இறுதியில் 5 லட்சம் கோரி அதனை மூன்று லட்சமாக குறைத்துக்கொண்டு பணத்தையும் எடுத்துக் கொண்டு நாரம்மல பகுதிக்கு சென்று கொடுத்தேன்.
அப்போதும் அவர்களை விடுவிக்கவில்லை. கொடுத்ததில் ஒரு 1000 ரூபா நோட்டு குறைவதாக கூறினர். மகனையும் கணவரையும் திருப்பித் தரவில்லை.அண்மையிலேயே மகன் பயணித்த வான் கைப்பற்றப்பட்டுள்ளது. அதிலும் எஞ்ஜின், செஸி இலக்கங்கள் வேறாக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் கூறுகின்றனர். என்ன நடக்கிறது என தெரியவில்லை. தயவு செய்து எனது கணவரையும் மகனையும் மீட்டுத் தாருங்கள் என்றார்.
இதனையடுத்து கடத்தப்பட்டு காணாமல் போயுள்ள மொஹம்மட் சாஜித் எனும் நபரின் சகோதரர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அவரும் தனது சகோதரை மீட்டுத் தருமாறும் அவர் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் எவ்வித சம்ப்ந்தமும் அற்றவர் எனவும் கூறினார். குறிப்பாக விமல் வீரவன்ச தமது பிள்ளைகளை புலிகள் இயக்கத்துடன் தொடர்பு படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், 8 வருடங்களின் பின்னர் இவ்வாறானதொரு விடயத்தை அவர் தெரிவிப்பதானது கவலையளிப்பதாகவும் பெற்றோர் தெரிவித்ததுடன் இந்த சம்பவத்துக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என கை கூப்பி வேண்டுகோள் விடுத்தனர்.