ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்ததால், மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
சேலம் மாவட்டம் வீரானூர் பகுதியை சேர்ந்தவர் மாணவி வளர்மதி. இவர், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு சேலம் அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் துண்டுபிரசுரம் வினியோகம் செய்து கொண்டிருந்த போது கடந்த 13-ம் திகதி கைது செய்யப்பட்டார்.
அப்போது கைதான வளர்மதி கூறுகையில், ’கல்லூரி மாணவியான என்னை மாவோயிஸ்டு என காவல் துறை முத்திரை குத்துகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நோட்டீஸ் வினியோகித்தேன் அதற்காக என்னை கைது செய்துள்ளனர்.
சிறையில் அடைத்தாலும் அங்கு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன். சிறையில் இருந்து வெளியில் வந்தாலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன்’ என்றார்.
அன்று இரவே 2 பேரும் ஏற்காடு ரோட்டில் உள்ள நீதிபதி வீட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது வளர்மதியை வருகிற 26-ந்திகதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஜெயந்தி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சேலம் பெண்கள் கிளை சிறையில் அடைக்கப்பட்ட வளர்மதி சிறையில் வழங்கப்பட்ட உணவையும் சாப்பிட மறுத்து உண்ணாவிரத போராட்ட போராட்டத்திலும் ஈடுபட்டார்.
இந்நிலையில், அரசுக்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்கியதாக மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதையடுத்து கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். விரைவில் ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்படும் என்று அவரது வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.
மக்கள் பிரச்சனைக்காக போராட முன் வந்த மாணவி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே,ஈழத் தமிழர்களுக்காக மெரினா கடற்கரையில் நினைவேந்தல் கூட்டம் நடத்த முயன்ற மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.