சித்திரையே வருவாயே …!!!
வசந்தத்தின்வாரிசாய்
வருகிறாள் சித்திரையாள்.
வையகம் மகிழவுறப்புது
வருஷமாய் வருகிறாள்.
கசந்ததிடும் பகை போக்க
கனிந்திடும் நல்லெண்ணக்
கருமத்தின் தூதுவனாய்க்
காலத்தின் கட்டாயத்தில்
நிசத்தோடு போராடும்
நிலங்களின் விளைவாக
நித்திலம் சுற்றிடும்
நிகழ்வினின் பிறப்பாக
சித்திரையாள் வருகிறாள்
சிரித்திடும் இயற்கையும்
சிரம் தாழ்த்திக் கைகூப்ப
மங்களமாய் வருகிறாள்.
சென்றவைகள் செல்லட்டும்
சேர்பவைகள் நலமாகட்டும்
புதுமைகள் படைக்கட்டும்
புதுவாழ்வு பிறக்கட்டும்
காலத்தில் மாரி வழங்க
ஞாலத்தவர் வாரி வழங்க
கோலத்திலுயர் விலை வருங்
காலத்தில் கட்டுண்ண
அரசியற்கைதிகளும்
அலைகின்ற அகதிகளும்
உறவுகளின் உண்மைகளும்
உறங்காத கனவுகளும்
உலகத்தில் நலம் பெறவே
உள்ளத்தில் மகிழ்வுறவே
உன் வரவு சிறப்புறவே
உறுதுணையாய் வருவாயே! …..
– வேதநாயகி குணம்.
களுதாவளை.