எம்.கே.சிவாஜிலிங்கம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்பாக சுயாதீன ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனிடம் குற்ற புலனாய்வுத்துறை விசாரணை ஒன்றிணை நடத்தியுள்ளது.
குறித்த விசாரணை இன்று 2 மணிநேரம் வரையில் இடம்பெற்றுள்ளதுடன், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில், மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் நடைபெற கூடாது. அந்த கூட்டத்திற்காக ஜனாதிபதி முல்லைத்தீவிற்கு வருகைதரக் கூடாது என கூறியது தொடர்பாகவே நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 5ம் மாதம் 8ம் திகதி யாழ்.ஊடக அமையத்தில் பத்திரிகையாளர் சந்திப்பினை நடத்திய எம்.கே.சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் சந்தர்ப்பத்தில் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடத்தப்படக் கூடாது.
அதில் ஜனாதிபதி கலந்து கொள்ள கூடாது எனவும் அவ்வாறு கலந்து கொண்டால் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்போம் எனவும் கூறியிருந்தார்.
இந்த கருத்து தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு குறித்தே குற்ற புலனாய்வுத்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த விசாரணையில் யாழ்.மாவட்ட சுயாதீன ஊடகவியலாளரும், யாழ்.ஊடக அமையத்தின் செயலாளருமான தம்பித்துரை பிரதீபன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக விசாரிப்பதற்காக கடந்த 10ம் திகதி தம்பித்துரை பிரதீபனை கொழும்புக்கு வருமாறு குற்ற புலனாய்வுத்துறை அழைப்பு விடுத்திருந்தது.
எனினும், அந்த ஊடகவியலாளர் விபத்தில் சிக்கி நடமாட இயலாத நிலையில் இருந்ததால் 10ம் திகதி விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை எனவும், தான் நடமாட இயலாத நிலையில் இருக்கின்றமை தொடர்பாக குற்ற புலனாய்வுத்துறையினருக்கு தெரியப்படுத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து கொழும்பில் இருந்து யாழ். சென்ற குற்ற புலனாய்வுத்துறையின் குழு ஒன்று யாழ்.அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் வைத்து இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
மேலும், இந்த விசாரணைகளில் ஊடகவியலாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டு சிங்கள மொழியிலேயே அவருடைய விளக்கம் எழுதப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது