ஜேர்மனியில் உள்ள பவேரியா நகருக்கு அருகில் நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றிக்கொண்டு லொறி ஒன்று பயணமாகியுள்ளது.
குடியிருப்புகள் அதிகளவில் இருந்த சாலை வழியாக லொறி சென்றபோது திடீரென டேங்கரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
லொறியில் தீ எரிவதை கண்ட ஓட்டுனர் வண்டியை நிறுத்திவிட்டு தீயை அணைக்க போராடியுள்ளார். ஆனால், தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
சாலையை சுற்றி எண்ணற்ற குடியிருப்புகள் இருப்பதை பார்த்த ஓட்டுனர் கவலை அடைந்து தனது உயிரை பணயம் வைத்துள்ளார்.
‘எந்த நேரத்திலும் டேங்கர் வெடித்து சிதறும்’ என்பதை அறிந்த ஓட்டுனர் துணிச்சலாக மீண்டும் லொறியில் ஏறி இயக்கியுள்ளார்.
செல்லும் வழியில் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்ததும் சுமார் 100 தீயணைப்பு வாகனங்கள் லொறியை பின் தொடர்ந்து சென்றுள்ளன.
சில நிமிடப் பயணத்திற்கு பின்னர் 35,000 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பப்பட்ட அந்த லொறி ஒதுக்குப்புறமான இடத்தில் நிறுத்தப்பட்டு தீயை வீரர்கள் அணைத்துள்ளனர்.
லொறி வெடிக்கவில்லை என்பதால் யாருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.
பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பப்பட்ட லொறியில் தீ விபத்து ஏற்பட்டால் அங்கிருந்து தப்பிச் செல்ல தான் அனைவரும் முயல்வார்கள்.
ஆனால், பொதுமக்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படக்கூடாது என எண்ணி துணிச்சலாக லொறியை ஊருக்கு வெளியே கொண்டு சென்ற ஓட்டுனரை பொதுமக்களும் ஊடகங்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.