நல்லாட்சி அரசாங்கத்திலும், நீதியையும் சட்டத்தையும் மதித்துச் செயற்படுகின்ற போக்கு புறக்கணிக்கப்பட்டிருக்கின்ற ஒரு நிலைமையையே காண முடிகின்றது. சட்டம் ஒழுங்கைப் பேண வேண்டியது சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற பாதுகாப்புத் துறையினரைச் சார்ந்திருக்கின்றது. சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டுகின்ற பொறுப்பு நீதி அமைச்சைச் சார்ந்திருக்கின்றது.
எனவே, சட்டத்தையும் நீதியையும் நியாயமான முறையில் நிலைநாட்டுவது நீதி அமைச்சரின் பொறுப்பாகக் கருதப்படுகின்றது.
ஆனால் மனித உரிமை நிலைமைகளையும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பயன்பாடுபற்றியும் நேரில் கண்டறிந்த ஐநாவின் விசேட அறிக்கையாளர் பென் எமர்ஸனின் கருத்துக்களுக்குக் கடுந்தொனியில் நீதி அமைச்சர் அளித்துள்ள பதில் பலரையம் திடுக்கிட வைத்துள்ளது. அதிர்ச்சியடையவும் செய்திருக்கின்றது.
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பிலான அவருடைய கருத்துக்கள் சிறுபான்மை தேசிய இனமாகிய தமிழ் மக்களின் மனங்களைக் காயப்படுத்தவும் செய்திருக்கின்றது. நீண்ட காலமாக விசாரணைகளோ விடுதலையோ இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள 71 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாது என அவர் கூறியுள்ளார். வெறும் அரசியல் ரீதியானதொரு தேவைக்காக வெளியிடப்பட்ட கருத்தாக அல்லாமல், மனித உரிமைகள் என்ற உன்னதமான ஒரு விடயத்துடன் சம்பந்தப்பட்டதாக இந்தக் கருத்து வெளிவந்திருக்கின்றது என்பதுதான் சோகமானது.
கவலைக்குரியது. கவனத்திற்கும் தீவிர சிந்தனைக்கும் உரியதாகின்றது.
மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பிலான ஐநா மன்றத்தின் விசேட அறிக்கையாளராகிய பென் எமர்ஸன் இலங்கைக்கு மேற்கொண்ட ஐந்து நாள் விஜயத்தின் இறுதியில், தனது அவதானிப்புகள் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கு, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச கடும் போக்கில் பதிலளித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்த பென் எமர்ஸன் உள்ளிட்ட ஐநாவின் விசேட அறிக்கையாளர்கள் – பண்பாற்றல் அற்றவர்கள், அரசியல் ரீதியான பெயலாண்மைத் திறமற்றவர்கள் என சாடியிருக்கின்றார். இது சர்வதேச ரீதியிலான இராஜதந்திரிகளையும் துறைசார்ந்த வல்லுனர்களையும் திகைப்படையச் செய்திருக்கின்றது.
பென் எமர்ஸன், மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு விவகாரங்களுக்கான ஐநாவின் விசேட அறிக்கையாளராவார். பல நாடுகளுக்கும் விஜயம் செய்து இதுவிடயத்தில் நிலைமைகளை அவதானித்தவர். அத்துடன் மனித உரிமைகளின் மேம்பாட்டுக்காகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்காகவும் பணியாற்றி வருபவர். அந்தத் துறையில் அனுபவமும் நிபுணத்துவமும் வாய்ந்தவர். முப்பது வருட காலமாக யுத்தம் ஒன்றுக்கு முகம் கொடுத்திருந்த ஒரு நாட்டின் நீதி அமைச்சர், அவருடனான சந்தி;ப்பின்போது கடும் போக்கில் நடந்து கொண்டதுடன், அவருடைய அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் கடும் வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பது இலங்கையின் ஜனநாயகத் தன்மையையே கேள்விக்கு உள்ளாக்கியிருக்கின்றது.
அரசாங்கத்தின் அனுமதியுடன் இலங்கை;கு ஐந்து நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த பென் எமர்ஸன், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பற்றிய பல விடயங்களை வெளிப்படுத்தியிருக்கின்றார். இந்தக் கைதிகள் தொடர்பான விபரங்களைக் கோரியபோது பல்வேறு புள்ளிவிபரங்கள் தரப்பட்டதாகக் கூறியுள்ள பென் எமர்ஸன், தற்போது 81 கைதிகள் இவ்வாறு நீதி விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். அவர்களில் 70 பேர் ஐந்து வருடங்களுக்கு மேற்பட்ட காலம் விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த 70 பேரில் 12 பேர் பத்து வருடங்களுக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் என்ற அதிர்ச்சிதரும் தகவலையும் அவர் வெளியிட்டிருக்கின்றார்.
பயங்கரவாதத் தடைச்சட்டம்
பயங்கரவாதத் தடைச்சட்டம் அடிப்படை மனித உரிமைகளை மீறுகின்ற ஒரு மோசமான சடடம் என மனித உரிமை செயற்பாட்டாளர்களும் உள்ளுர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் சுட்டிக்காட்டி வந்துள்ளன. அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் மோசமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார்கள் – உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது,
இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்ற ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு, அவரிடமிருந்து பெறப்படுகின்ற குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றே போதும் என்ற சட்ட விதியானது, பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் அல்லது பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு துணை புரிந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட – கைது செய்யப்படுகின்ற தமிழர்களுக்கு எதிராகச் செயற்படுவதற்குப் படையினரைத் தூண்டுவதாக அமைந்துள்ளது என்றும் ஏற்கனவே பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனை உறுதி செய்யும் வகையில் ஐநா விசேட பிரதிநிதி பென் எமர்ஸன் கருத்து வெளியிட்டுள்ளார்.
குற்ற ஒப்புதல் என்பது, வாக்குமூலங்களுக்கான ஒரேயொரு மூலம் என்ற விதத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் வழங்கப்படும் (வேறு சாட்சியங்களினால் நிரூபிக்கப்படாத) ஒப்புதல் வாக்குமூலங்களைச் செயற்படுத்துவதற்கு இடமளிக்கும் விதிவிலக்கான ஏற்பாடுகளுக்கூடாக ஒரு முறைமைசார்ந்த விதத்தில் தொடர்ச்சியாக சித்திரவதையைப் பயன்படுத்தும் நிலைமையை இச்சட்டம் (பயங்கரவாதத் தடைச்சட்டம் போசித்து வளர்த்து வந்துள்ளது. ஒட்டுமொத்தச் சமூகங்களும் களங்கப்படுத்தப்பட்டு, துன்புறுத்தல், தன்னிச்சையான கைது மற்றும் தடுத்து வைத்தல் என்பவற்றுக்கான இலக்குகளாகக் கொள்ளப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் மறைமுகமான விதத்திலாவது ஏதேனும் தொடர்புகளைக் கொண்டுள்ளார் என சந்தேகிக்கப்படும் எந்த ஒரு நபரும் தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதை என்பவற்றை எதிர்கொள்ளும் உடனடி ஆபத்தைக் கொண்டுள்ளார் என பென் எமர்ஸன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
எந்தவொரு விடுதலைப்புலிகளையும் விடுதலை செய்ய முடியாது
அத்துடன், ‘தேசியப் பாதுகாப்புக் காரணங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தடுப்புக்காவல் கைதிகளைப் பொறுத்தவரையில் சித்திரவதையைப் பயன்படுத்தும் நிலை இன்னமும் பரவலான – வழமையான ஒரு செயற்பாடாக இருந்து வருகின்றது என்ற முடிவுக்கு வருவதற்கு அனைத்துச் சான்றுகளும் காணப்படுகின்றன. அதிகாரிகள் தமிழ் சமூகத்தின் உறுப்பினர்களுக்கெதிராக இந்தச் சட்டவாக்கத்தை விகிதாசாரத்திலும் பார்க்க மிதமிஞ்சிய அளவில் பயன்படுத்தி வரும் காரணத்தினால் இச்சமூகமே நன்றாக எண்ணெய் ஊற்றி இயக்கப்பட்டு வரும் அரசாங்கத்தின் சித்திரவதைக் கருவியின் சுமையைத் தாங்க வேண்டியிருக்கி;ன்றது.’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்துரைக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் அந்த 71 விடுதலைப்புலிகளை எந்த ஒரு காரணத்திற்காகவும் விடுதலை செய்ய முடியாது என கடுந் தொனியில் தெரிவித்திருக்கின்றார்.
இவர்கள், குண்டுவைத்தல், கொலை செய்தல் போன்ற பாரிய குற்றங்களைச் செய்த பயங்கரவாதிகள் எனவும். அதனால் அவர்களை விடுதலை செய்ய முடியாது எனவும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச கூறியிருக்கின்றார்.
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகக் 1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் தற்காலிக சட்டமாகவே முதலில் கொண்டு வரப்பட்டது. பின்னர் 1982 ஆம் ஆண்டு இந்தச் சட்டம் நிரந்தர சட்டமாக மாற்றப்பட்டது. பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான அந்தப் போராட்டத்தை இல்லாதொழிப்பதற்காகவுமே பயங்கரவாதத் தடைச் சட்டம் கடுமையான சட்ட விதிகளை உள்ளடக்கியதாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.
வரைபு நிலையில் உள்ள புதிய எதிர்ப்புச் சட்டம்
விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாட்டில் பயங்கரவாதச் செயற்பாடுகள் இடம்பெறவில்லை என்று யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தினால் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் பயங்கரவாதச் செயற்பாடுகள் என வர்ணிக்கப்பட்ட செயல்களைப் புரிந்தவர்களைக் கடுமையாகத் தண்டிப்பதற்காக, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை வலுவுள்ள முறையில் நடைமுறைப்படுத்தவதற்கு உறுதுணையாக இருந்த அவசரகாலச் சட்டத்தையும் முன்னைய அரசாங்கம் நீக்கியிருந்தது. ஆனால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் தேசிய பாதுகாப்புக்கு உதவும் வகையில் தொடர்ந்து வைத்திருப்பதாக அந்த அரசாங்கம் தெரிவித்திருந்தது.
ஆனால் 2015 ஆம் ஆண்டு ஆட்சிபீடமேறிய நல்லாட்சி அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி, அதற்குப் பதிலாக, உலக ஒழுங்கிற்கு அமைவான முறையில், புதிதாக ஒரு பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உருவாக்கப் போவதாக அறிவித்திருந்தது. அதற்கான வரைபுகள் தயாரிக்கப்பட்டுள்ள போதிலும் புதிய சட்டம் கொண்டு வரப்படவில்லை.
அதேவேளை, பயங்கரவாதத் தடைச்சட்டம் இப்போது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்று நல்லாட்சி அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால், 2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பலர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் 80 வீதமானவர்கள் தாங்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர் மேசாமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருந்ததாகச் செய்துள்ள முறைப்பாடுகள், தம்மை கவலையுறச் செய்துள்ளதாக ஐநா விசேட பிரதிநிதி பென் எமர்ஸன் குறிப்பிட்டுள்ளார்.
குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் சுயவிருப்பில் அளிக்கப்படவில்லை
குற்ற ஒப்புதல் வாக்குமூலம் என்பது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்ற ஒருவர் சுயவிருப்பத்துடன் தானே முன்வந்து அளிக்கின்ற ஒரு வாக்குமூலமாக இருக்க வேண்டும். அத்தகைய வாக்குமூலமானது, நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது, அவருக்கு எதிரான சட்ட வலுவுள்ள ஆதாரமாகப் பயன்படுத்தப்படும் என்ற நடைமுறைச் செயற்பாட்டு உண்மையை அவர் தெளிவாக உணர்ந்திருக்க வேண்டும். அவ்வாறு அந்த வாக்குமூலத்தின் பின் விளைவை உணர்ந்த நிலையில் ஒருவர் மனமுவந்து அளிக்கின்ற ஒப்புதல் வாக்குமூலமே சட்டப்படி செல்லுபடியானதாகும்.
ஆனல் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ‘நானே குற்றம் புரிந்தேன்’ என ஒப்புக்கொண்டு, அளிக்கப்பட்டுள்ளதாகப் பெறப்பட்டுள்ள அல்லது பெறப்படுகின்ற ஒப்புதல் வாக்குமூலங்கள், பெரும்பாலானவை வற்புறுத்தலின் பேரில் சித்திரவதைக்கு ஊடாகவே பெறப்படுகின்றன என்பதையும் பென் எமர்ஷன் வெளிப்படுத்தியுள்ளார்.
‘கொழும்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் வழக்குகளுக்குப் பொறுப்பாக இருந்து வரும் மூத்த நீதிபதி ஒருவர், 2017 வரையில் அவர் கையாண்டிருக்கும் வழக்குகளில் 90 சதவீதத்துக்கு மேற்பட்ட வழக்குகளில் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் பலவந்தத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அல்லது அச்சுறுத்தலைப் பயன்படுத்துவதன் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்த காரணத்தினால் அத்தகைய சாட்சியங்களை நீக்க வேண்டிய நிர்ப்பந்தம் தனக்கு ஏற்பட்டதாக விசேட ஆணையாளரிடம் தெரிவித்தார். அவை சுயவிருப்பில் வழங்கப்பட்ட வாக்குமூலங்களாக இருக்கவில்லை,’ என ஐநா விசேட அறிக்கையாளர் இலங்கை விஜயம் தொடர்பான தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சியூட்டும் நடைமுறை
நாட்டில் பயங்கரவாதம் இல்லை. பயங்கரவாதச் செயற்பாடுகள் எதுவும் இப்போது இடம்பெறுவதில்லை என்று உறுதிப்பட கூறியிருக்கின்ற போதிலும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கு உரிய அர்த்தமுள்ள நடவடிக்கைகளை நல்லாட்சி அரசாங்கம் இன்னும் மேற்கொள்ளவில்லை. அத்துடன் புதிய அம்சங்களை உள்ளடக்கியதாக, புதிய பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்படும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று அறிவித்துள்ள போதிலும், அந்தச் சட்டத்தைக் கொண்டு வருவதிலும் அரசு அக்கறையற்ற ஒரு போக்கையே கடைப்பிடித்து வருகின்றது.
அதேவேளை பங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் மோசமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என்பதை பென் எமர்ஸன் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நேரடியாகக் கண்டறிந்துள்ளார்.
‘பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் முன்னர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கைதிகள் மற்றும் தற்பொழுது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் ஆகியோருடன் நடத்திய நேர்காணல்களின் போது மிகவும் கொடூரமான சித்திரவதை வடிவங்கள் தொடர்பான கதைகளை செவிமடுக்க நேரிட்டது. பொல்லுகளைக் கொண்டு அடித்தல், உடலை அழுத்தும் செயற்பாடுகளின் பிரயோகம், மண்ணெண்ணெய் நிரப்பிய பிளாஸ்ரிக் பைகளைப் பயன்படுத்தி மூச்சுத்திணற வைத்தல், நகங்களைப் பிடுங்கியெடுத்தல், நகங்களுக்குள் ஊசிகளை ஏற்றுதல், நீரின் மூலம் செய்யப்படும் பல்வேறு விதமான சித்திரவதைச் செயல்கள், ஆட்களைப் பல மணித்தியாலம் பெருவிரலில் தொங்க விடுதல் மற்றும் அந்தரங்க உறுப்புக்களைச் சிதைத்தல் என்பனவும் இவற்றில் அடங்குகின்றன’ என பென் எமர்ஸனின் அறிக்கை கூறுகி;ன்றது.
இந்தக் குற்றச்சாட்டுக்;கள் வெறும் வாய்ப் பேச்சிலான குற்றச்சாட்டுக்கள் அல்ல. அவைகள் உறுதிப்படுத்தப்பட்டவை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘……இத்தகைய குற்றச்சாட்டுக்கள், ஒன்றில் சுயாதீனமான மருத்துவச் சான்றுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன அல்லது வழக்கு விசாரணையின் போது குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை நிராகரிப்பதற்கான ஒரு அடிப்படையாக நீதிமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. சித்திரவதை செய்யும் கடும் மன அதிர்ச்சியூட்டும் நடைமுறை இலங்கையில் நிலவி வரும் நிலையிலும் கூட, அத்தகைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக வினைத்திறன் மிக்க விதத்தில் புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதில்லை…’ என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
தடுப்புக் காவலின் சட்டவலு குறித்து மீளாய்வு தேவை
சந்தேக நபர்களை சித்திரவதைக்கு உட்படுத்தியதாகக் குற்றச்சாட்டில் 71 பொலிசாருக்கு எதிராக மட்டுமே வழக்கு தொடரப்பட்டிருப்பதாக அரச தரப்பில் ஐநா விசேட அறிக்கையாளர் பென் எமர்ஸனுக்கு அதிகாரபூர்வமாகத் தகவல் வழங்கப்பட்டிருக்கின்றது. தற்போது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்படும்போது, அதுகுறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்படுகின்றது. அத்துடன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடங்களைச் சென்று பார்வையிடவும் அந்தக் குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கின்றது.
ஆயினும், குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களுக்கு ஊடாக குற்றவாளியாக்கும் நடைமுறை வேரூன்றியிருக்கும் கட்டமைப்பில், சித்திரவதை உள்ளிட்ட கோழைத்தனமான சர்வதேச குற்றச்செயல்களைப் புரிகின்றவர்களிடமிருந்து, சந்தேக நபர்களைப் பாதுகாப்பதற்கு, இதுவும் (71 பொலிசார் மீது சித்திரவதை வழக்கு தாக்கல் செய்திருப்பது) ஏனைய பாதுகாப்பு வழிமுறைகளும் போதுமானதல்ல என்பதை நிரூபித்துள்ளது என்றும் பென் எமர்ஸன் தனது அறிக்கையில் குறித்துக் காட்டியிருக்கின்றார்;.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிரான வழக்குகளைத் துரிதமாக விசாரணை செய்வதற்கென அமைக்கப்பட்ட இரண்டு நீதிமன்றங்களும் அவற்றுக்குரிய ஆளணிகள் உரிய முறையில் நியமிக்கப்படாத காரணத்தினால் பயனற்றுப் போயிருக்கின்றன என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கின்றது.
வழக்குத் தாக்கல் செய்யப்படாமலும் விசாரணைகளின்றியும் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களுடைய நிலைமை மோசமானது என குறிபபிட்டுள்ள அந்த அறிக்கை அவர்களுடைய தடுப்புக்காவல் முறைமை தொடர்பில் சட்ட வலு குறித்து மீளாய்வு செய்து அவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பென் எமர்ஸன் அரசாங்கத்திடம் கோரியிருக்கின்றார்.
ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்காகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் சரியான முறையில் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு நியாயமான நீதி விசாரணை கிடைப்பதற்கு அரசாங்கம் வழி செய்ய வேண்டும். அத்துடன் சித்திரவதைச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் பொருத்தமான பொறிமுறையொன்றை உருவாக்கிச் செயற்பட அரசாங்கம் முன்வரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.
வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் மனித உரிமைகளுக்கும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்குமான ஐநாவின் விசேட அறிக்கையாளர் பென் எமர்ஸன் வெளியிட்டுள்ள அப்பட்டமான உண்மை நிலை சார்ந்த அறிக்கை நீதி அமைச்சரை சீற்றமடையச் செய்திருப்பதாகவே தெரிகின்றது. அதன் காரணமாகவே அவர் கடும் வார்த்தைகளைப் பிரயோகித்து அவரைச் சாடியிருக்கின்றார் என எண்ணத் தோன்றுகின்றது.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் ஆண்டு அரசாங்தக்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவதில் காலம் தாழ்த்தும் போக்கைக் கைவிட்டு துரிதமாகச் செயற்பட வேண்டும் என்பதையும் பென் எமர்ஸன் அறிவுறுத்தியிருப்பதை நீதி அமைச்சரினால் ஜீரணிக்க முடியாமல் போய்விட்டது போலவே தெரிகின்றது.
எது எப்படியாயினும் யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்கள் கழிந்துள்ள நிலையில், மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவதற்கும் உரிமைகள் மீறப்பட்டமைக்குப் பொறுப்பு கூறுவதற்கும் அரசு மேலும் தாமதிக்கக் கூடாது. நீதி அமைச்சரின் கருத்துக்கள் அரசாங்கத்தின் கருத்தாக எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. ஏனெனில் ஐநாவின் விசேட அறிக்கையாளர் ஒருவரை நேரடியாக நீதி அமைச்சர் சாடியுள்ள போதிலும் அதனை அரசாங்கம் கண்டுகொண்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை.
மனித உரிமைகள் விடயத்தில் ஐநா அதிகாரிகளுடன் வன்போக்கில் நடந்து கொள்வது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒருபோதும் வழி சமைக்காது. நிலைமைகளை மோசமடையச் செய்யவும், நாட்டிற்குப் பாதகமான நிலைமைகளை உருவாக்கவுமே அது உதவும் என்பதில் சந்தேகமில்லை.