விடுதலைப்புலிப். பயங்கரவாதிகளை சிறையில் பார்வையிடுவதற்கு யார் ஐநா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனுக்கு அனுமதியளித்தது என சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியிருந்தார்.
அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைத்திருப்பவர்கள் மீது சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுவதாகக் குற்றம் சுமத்தியிருந்தார்.
அத்துடன் சிறிலங்காவின் நீதித் துறையின் சுதந்திரம் தொடர்பாகக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதனையடுத்து சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கும், பென் எமர்சனுக்குமிடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றதையடுத்து, சிறிலங்காவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துமிருந்தார்.
இந்நிலையிலேயே, நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களைச் சந்திப்பதற்கு, ஐ.நா அறிக்கையாளருக்கு அனுமதி கொடுத்தது யார் என்று சிறலங்கா அதிபர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சே, இதற்கான அனுமதியை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.