ஆஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் யூலை 23- 2017 ஞாயிற்றுக்கிழமை கறுப்பு யூலை நினைவின் மாபெரும் ஒன்றுகூடல்.
உலகளாவிய ரீதியில் நீதிவேண்டி உரிமை வேண்டித் தமிழர் நடாத்தும் கறுப்பு யூலை நினைவின் மாபெரும் ஒன்றுகூடல் ஆஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில், உலகின் இரண்டாவது பாரிய யுத்த நினைவு மயானத்தை உள்ளடக்கிய ரூக்வூட் மயானத்தில், நடைபெறவுள்ளது.
இடம்: Tamil War Memorial Rockwood Cemetery , (Block E,Section 6,Necropolis Drive,Rocwood.
காலம்: யூலை 23, 2016 ஞாயிறு
நேரம்: மாலை: 3:00 மணி
1983 யூலை ஆரம்பித்த தமிழினப்படுகொலை இன்று 34 ஆண்டுகள் கடந்தும் தொடர்கின்றது. தனது பொறுப்பில் இருந்து தொடர்ந்தும் தவறி நிற்கும் சர்வதேசத்தை அதன் மனிதநேயக் கடமைகளை ஆற்ற வைக்க நாம் தொடர்ந்தும் கடுமையாக உழைக்க வேண்டும். இது நாம் துவண்டு கிடக்கும் நேரமல்ல விவேகத்துடன் விரைந்து செயற்படும் காலம்.
இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து காலங்காலமாக ஆட்சிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர் நிலங்களை அபகரிப்பதில் மிகவும் மும்மரமாகச் செயற்பட்டார்கள். அதன் உச்சக்கட்ட நடவடிக்கையே தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழர் நில அபகரிப்பு என்பதனைப் பார்க்கக் கூடியதாகவுள்ளது.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தை ஏற்படுத்தியவர்கள் தொடர்ந்து தமது இலக்காக தமிழர் மண்ணைப் பறிக்கும் முயற்சியில் இறங்கியிருப்பது ஒன்றும் புதிய விடயமில்லையெனினும் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நில அபகரிப்பின் தீவிரம் மிகுந்த அச்சத்தைத் தருவதாக அமைகின்றது. அதனால் அவர்களின் அம்முயற்சியை முறியடிப்பது புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களின் முக்கிய கடமை மட்டுமன்றித் தேசியக் கடமையுமாகும்.
யூலை 83இல் படுகொலை செய்யப்பட்ட எம்முறவுகளை நினைவுகூர்வதுடன் போர்க்குற்றங்கள் குறித்துச் சிறீலங்கா மீது சுயாதீனமான சர்வதேச விசாரணை ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்நேரத்தில் அதற்குரிய ஆதரவை முற்றுமுழுதாக வழங்குவதுடன் போர்க்கைதிகள் அனைவரும் உடனடியாக சர்வதேசக் கண்காணிப்பில் கொண்டுவரப்பட வேண்டும், போர்க்கைதிகள் நிபந்தனையின்றி விடுவிக்கப்படவேண்டும்.கருப்பு ஜூலையின் நெருப்பு நினைவுகள் … எங்கள் துயர்க்காலத்தை என்றும் மறக்காது நினைவுகூர அனைவரையும் உரிமையுடன் அழைக்கின்றோம்.