சவுதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 14 கைதிகள் விடயத்தில் பிரதமர் தெரேசா மே தலையிட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து எழுத்துமூலமாக பிரதமர் தெரேசா மேக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தொழிற்கட்சியின் முன்னாள் தலைவர் மிலிபன்ட், கன்சர்வேட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆன்ட்ரு மிச்சேல் மற்றும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டொம் பிரேக் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
குறித்த கடிதத்தில், மரணதண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என சவுதி அரேபிய மன்னர் சல்மான் மற்றும் அவருடைய மகனும் முடிக்குரிய இளவரசருமாகிய பின் சல்மான் ஆகியோரை பிரதமர் தெரேசா மே தனிப்பட்ட முறையில் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த 14 பேரும் கைது செய்யப்பட்ட போது, பிரித்தானிய பொலிஸ் பயிற்சியாளர்களும் உடந்தையாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகின்ற நிலையில், அவ்வாறு இல்லை என்பதை உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட முனைந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட குறித்த 14 பேரில் 17 வயது நிரம்பிய ஒருவரும் கேட்டல் மற்றும் பார்வை குறைபாடு கொண்ட நபர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.